பாலியல் வன்கொடுமைக்குஎன்கவுன்டர் தீர்வா?

உணர்ச்சிமயமான சமூக மனநிலை உருவாக்கப்பட்டுள்ள சூழலில் உரிமைகள் பற்றி பேசுவது கேலிக்கு உரியதாகவும் பொருத்தமற்றதாகவும் பார்க்கப்படக்கூடும். குற்றவாளிகளுக்கு ஆதரவான குரலாகக் கூட புரிந்துகொள்ளப்படலாம்.

ஹைதராபாத்தில் அந்தப் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதோடு கொலையும் செய்தவர்கள் மீது நாடு முழுவதும் பெரும் கோப அலை எழுந்தது நியாயமானது. இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்கின்றனவே, தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் இந்தக் கொந்தளிப்பில் இருக்கிறது.

குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்த்தி அடித்தே் கொல்ல வேண்டும், அவர்களது ஆண்மை அகற்றப்படவேண்டும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்திலேயே கூட அப்படிப்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகள் எனக் கூறப்பட்ட நான்கு பேர் இன்று அதிகாலையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைப் பெரும்பகுதி மக்கள் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் என்பது உண்மை. இந்த உணர்வில் உள்ள ஆவேசத்தைக் கொஞ்சமும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

நமது சட்ட நடைமுறைகள், இழுத்தடிக்கப்படும் நீதிமன்ற விசாரணைகள், செல்வாக்குள்ள நபர்கள் என்றால் வளைக்கப்படும் விதிகள் – இவற்றையெல்லாம் தொடர்ந்து பார்த்துவந்திருப்பதால் ஏற்பட்டிருக்கிற ஒரு பொதுவான நம்பிக்கையின்மையும் இந்தக் கொண்டாட்ட மனநிலையின் பின்னணியில் இருக்கிறது. காவல்துறையினர் வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்துவிட்டார்கள் என்று ஒரு ஹீரோ நடவடிக்கையாகப் பார்க்கிற உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அடிப்படையில் நான் மரண தண்டனை கூடாது என்ற கருத்துள்ளவன். அப்படிப்பட்ட சட்ட மாற்றம் எப்போது வருமோ தெரியாது. அதேவேளையில், இப்படிப்பட்ட குற்றங்களுக்கு நாட்டின் தண்டனைச் சட்டத்தில் உள்ள அதிகபட்ச தண்டனை என்னவோ அது அளிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தண்டனையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் மீது முறையாக, நேர்மையாக, விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட வேண்டும். காவல்துறையினரே நீதிபதிகளாக மாறி விடக்கூடாது.

அந்த 4 பேரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் அல்ல. அதற்கான நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பே இந்த என்கவுண்டர் நடந்திருக்கிறது. இப்போதைக்கு நாம் காவல்துறையின் அறிக்கையை வைத்துதான் பேச வேண்டியிருக்கிறது.

நடந்தது உண்மையான என்கவுண்டரா, அல்லது போலி என்கவுண்டரா என்று இனிமேல்தான் தெரியவரும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே தப்பிக்க முயன்று அப்போது மோதல் நடந்து அதில் இறந்துவிட்டார்கள் என்றால் உண்மையான என்கவுன்டர். திட்டமிட்ட முறையில் கொண்டு செல்லப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் போலி என்கவுண்டர். மனித உரிமை அமைப்புகள் நிச்சயமாக உண்மை அறியும் குழுக்களை அமைத்து விசாரிப்பார்கள். அதில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரக்கூடும். உண்மையான என்கவுண்டர்தான் என்றால் அதுவும் தெரிந்துவிடும்.

குறிப்பிட்ட ஒரு குற்றச் செயல், அதற்கான தண்டனை என்ற அளவில் மட்டுமே விவாதங்கள் நடக்கின்றன. பெண்ணுக்கு எதிராகக் காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்ற எண்ணங்கள், பெண் ஏன் வெளியே வர வேண்டும் என்பது போன்ற பெண்ணுக்கு மட்டும் கொட்டப்படுகிற ஆயிரமாயிரம் அறிவுரைகள், பெண்ணை போகப்பொருளாக மட்டுமே பார்க்கிற ஆணாதிக்க அத்துமீறல்களை நியாயப்படுத்தும் மரபுகள், ஆண் இளைஞர்களின் மனங்களில் பாலியல் வக்கிர உணர்வுகளை வளர்க்கும் நடைமுறைகள் என்று சமூகம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய, முடிவு கட்ட வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட கேள்விகள் முன்னுக்கு வருவதிலிருந்து இப்படிப்பட்ட விவாதங்கள் திசை திருப்பிவிடுகின்றன. பெண்ணுரிமை உள்ளிட்ட சமுதாய மாற்றங்களை விரும்பாத சக்திகளுக்கு இத்தகைய விவாதங்கள் சாதகமாக அமைகின்றன.

இப்போதும் கூட, பாலியல் வன்கொடுமை நடக்கிறபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால்தான் கொலை வரையில் போகிறது, அதை தடுக்க பெண்கள் வெளியே போகும்போது கையில் காண்டம் எடுத்துச் செல்லலாம், பாலியல் வெறியோடு நெருங்கும் ஆண்களிடம் கொடுத்து ஒத்துழைக்கலாம் என்ற கருத்துகளைப் பெரிய இடங்களில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது அந்த பாலியல் கொடுமைக்கு நிகரான வக்கிரம் அல்லவா?

2011இல் சல்வா ஜுடும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறிய கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. “தலையாய மாண்பு எதுவெனில், அரசமைப்பு சாசனத்தின் நான்கு மூலைகளுக்கு உள்ளேயே செயல்படும் பொறுப்பு அரசின் ஒவ்வொரு அங்கத்திற்கும் இருக்கிறது என்பதுதான். அதுதான் இறுதியாக சட்டத்தின் ஆட்சி,” என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆம், சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற வேண்டும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்களின் ஆட்சியாக மாறிவிடக்கூடாது.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..