நெல்லை தென்காசி பகுதிகளில் தொடர் கன மழை;தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தல்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3 மாவட்டங்களிலும் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது. இதன் காரணமாக தென் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.இதனால் அணை பாதுகாப்பை கருதி நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நள்ளிரவில் சிறிது நேரம் சாரல் மழையும், சிறிது நேரம் கனமழையும் என மாறி மாறி பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடை விடாது மழை கொட்டியது.

கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு இன்று காலை வினாடிக்கு 14204 கன அடி தண்ணீர் அணைக்கு வந்ததால் பாபநாசம் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இன்று காலை வினாடிக்கு 14270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கல்யாண தீர்த்தம், அகஸ்தியர்பட்டி அருவிகளில் தண்ணீர், பாறை தெரியாத அளவிற்கு வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று அகஸ்தியர் அருவி பாலம், குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இன்று காலை ஒரே நேரத்தில் 14 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டதால் பாபநாசம் படித்துறை யாரும் குளிக்க முடியாத அளவுக்கு மூழ்கியுள்ளது. மேலும் காரையார், மற்றும் சேர்வலார் அணைகள் நிரம்பியதையடுத்துசுமார் 40,000 கனஅடிஉபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..