கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி மோட்டார் பைக் வழங்க தமிழக அரசுக்கு TARATDAC கோரிக்கை

தமிழக அரசு இரண்டு காலும் செயலிழந்த இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 75% ஊனத்திற்கு மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய பைக் வழங்கி வருகிறது.ஒரு கால் முற்றிலும் துண்டிக்கப்பட்டவர்கள் 90% ஊனம் இருந்தாலும் தமிழக அரசின் விதிமுறைகள் பைக் வழங்க அனுமதிப்பதில்லை.விதிமுறைகள் இவ்வளவு கடுமையாக இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பலருக்கும் மோட்டார் பைக் வழங்க இயலாமல் உள்ளது. இன்றைய நவீன வேகமான உலகில் நல்ல நிலையில் உள்ள மக்கள் அனைவரும் வேகமாக செல்ல வேண்டும் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என வேகம் அதிகமாக செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையே வாங்குகின்றனர். இந்த வேகத்திற்கு மூன்று சக்கர சைக்கிளில் சாலைகளில் பயணிப்பது என்பது உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்பொழுது என்ன நிகழுமோ என்கிற பயத்துடன் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் பயணிக்கிறார் என்பதுதான் நிதர்சன உண்மை.

இந்நிலையில் சாதாரண தரைத்தளத்தில் வேகமான வாகனங்களுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிளில் பயணிப்பது என்பதே இயலாத காரியமாக உள்ளபோது கொடைக்கானல் போன்ற மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளை கொண்டுள்ள மலைப்பிரதேசங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குவது எந்த விதத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்தராது என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக இரண்டு கைகளையும் பயன்படுத்தி பெடலை அழுத்தினால் மட்டுமே சைக்கிளை செலுத்த முடியும் என்கிற சூழ்நிலையில் ஒரு கையில் ஒரு பெடலும் மற்றொரு கையில் மற்றொரு பெடளையும் கொடுத்த சைக்கிளை ஓட்டச்சொன்னால் சைக்கிளுக்கு யார் பிரேக் பிடிப்பார்கள், யார் சைக்கிளை திருப்புவார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.

எனவே, எந்த விதத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்தராத சைக்கிளை தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். செங்குத்தாக உயரமான சாலைகளில் ஏறுவதோ அல்லது இறங்குவதோ உடலில் எந்த குறையும் இல்லாத நல்ல நிலையில் உள்ள மனிதர்களுக்கே சிரமமாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சாலைகளில் பயணிப்பது என்பது முற்றிலும் இயலாத காரியம்.இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிளில் பயணிக்கும்போது ஒரு வேலை பிரேக் பிடிக்காவிட்டால் அல்லது பழுதடைந்தால் அந்த மாற்றுத்திறனாளியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மலைப்பிரதேசங்களில் வசிக்கும் 80% மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாள அட்டை கூட இன்றுவரை வழங்கப்படவில்லை. முறையாக ஒவ்வொரு கிராமமாக வீடு வீடாக சென்று கணக்கெடுத்தால் மட்டுமே மலைப்பிரதேசங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க முடியும் என்கிற நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இவ்விசத்தில் தலையிட்டு மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்தி மோட்டார் பொருத்திய பைக் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..