குடியிருப்பு பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

செங்கம் அடுத்த பனைஓலை பாடி கிராமத்தில், இரண்டு இடங்களில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிபோதையில் வருபவர்கள் அப்பகுதி மக்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாகவும், அதனால் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். அவரின் உத்தரவின்பேரில், இரண்டு டாஸ்மாக் கடைகளும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திங்களன்று பனைஓலைபாடி கிராமத்தில் ஏற்கனவே டாஸ்மாக் மது கடை செயல்பட்ட இடத்தில், மீண்டும் கடை திறக்கப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், செவ்வாயன்று (நவ.5) கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் டி.கே. வெங்கடேசன், நிர்வாகிகள் சின்னதுரை, ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கம் செயலாளர் ஏ. லட்சுமணன், முபாரக் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக, எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர், மீண்டும் புதன் கிழமை (நவ.13) இரண்டு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை, டாஸ்மாக் கடை கட்டிட உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆவேசமடைந்த கிராம பெண்கள், வியாழன் அன்று (நவ.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..