திருவள்ளுவரின் “மத” அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதா.?

இயற்கையின் எல்லா வண்ணங்களும் அழகானவைதான். கறுப்பும் வெள்ளையும் மஞ்சளும் சிவப்பும் மாநிறமும் கலப்புமாய் தோல் வண்ணங்கள் மாறுபடுவதால் மனித இனம் ரசனைக்கு உரியதாக இருக்கிறது. மானுட வண்ணத்தில் வர்ணம் புகுத்தப்பட்டு, பிறப்பால் மனிதர்கள் சமமானவர்கள் அல்ல என்ற பாகுபாடு ஒரு தர்மமாக்கப்பட்ட பிறகுதான் அழகு சீர்குலைந்தது.

ஆதிக்கச் சித்தாந்த அடக்குமுறைகளாலும், அதற்கு எதிரான எழுச்சிகளாலும் இயற்கையான வண்ணங்களுக்கு அரசியல் அர்த்தங்கள் ஏற்றப்பட்டன. உலகெங்கும் சிவப்பு உழைப்பாளிகளின் போராட்ட வண்ணமாகியது. நீலம் இங்கே ஒதுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையைக் குறிப்பதாகியது. எல்லா நாடுகளிலும் தூய்மைக்கும் சமாதானத்துக்கும் வெள்ளை கற்பிக்கப்பட்டது. அழுக்கு, துக்கம், இழிநிலை வண்ணமாகக் கறுப்பு சித்தரிக்கப்பட்டது. அண்மைக் காலமாகவே கறுப்பு வண்ணம் மக்களின் எதிர்ப்புணர்வு அடையாளமாகியிருக்கிறது.

சூழ்ச்சி நாடகம்.!

காவி வண்ணம் ஒரு பக்கம் துறவின் அடையாளமாகியது. இன்னொரு பக்கம் இறைவனின் கட்டளைப்படியே மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு உருவானது என்ற மேலாதிக்கச் சித்தாந்த அடையாளமாகவும் மாறியிருக்கிறது. இதை நியாயப்படுத்தி நிலைப்படுத்துகிற சூழ்ச்சி நாடகத்தின் இன்றைய காட்சிதான் திருவள்ளுவர் ஓவியத்தில் அவரது வெள்ளாடைக்குக் காவி வண்ணம் பூசப்பட்டிருப்பது.

பாஜக-வின் அதிகாரப்பூர்வ ‘ட்விட்டர்’ தளத்தில் அந்த ஓவியம் பதிவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், “கற்றதனால் ஆய பயனென்கொல்…” என்ற குறட்பாவைக் குறிப்பிட்டு, திராவிட இயக்கத்தினரும் கம்யூனிஸ்ட்டுகளும் கடவுளை வணங்கமாட்டார்கள் என்றால் அவர்கள் படித்திருந்தும் என்ன பயன் என்று கேட்டிருக்கிறார்கள்.

படிக்க வேண்டியதைப் படித்ததால்தான் அவர்கள் கடவுள் இல்லை என்று புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சுருக்கமாகச் சொல்லிவைப்போம். ஆனால் அதிலே இவர்களுக்கு என்ன இழப்பு? திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்துள்ள பகுத்தறிவுச் சிந்தனைகளும், மனிதநேயக் கொள்கைகளும் இவர்களுடைய மதவெறி அரசியல் ஊடுருவலுக்குத் தடையாக இருக்கின்றன. அந்த ஆத்திரத்திலிருந்தே “வாலறிவன் நற்றாள் தொழார் எனின்” என்ற புலம்பல் புறப்படுகிறது.

தஞ்சை அருகில் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள வள்ளுவர் சிலை மீது “மர்ம நபர்கள்” சாணம் வீசி, கண்ணில் காகிதம் ஒட்டி அவமதித்திருக்கிறார்கள். இதைத் தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியுமா? பாஜக தலைவர் எச்.ராஜா, இந்து தர்மத்தையொட்டியே வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று பிரித்துக் குறள்களை எழுதினார் என்று பதிவிட்டிருக்கிறார். இந்து தர்மப்படி “வீடு” (மோட்சம்) என்பதாக ஒன்றிருக்க வள்ளுவர் வீடுபேறு பற்றி தனியதிகாரமாக எழுதுவதைத் தவிர்த்தது ஏனென்று கேட்கிறார் எழுத்தாளரும் தமிழ் ஆய்வாளருமான நா.முத்துநிலவன். திடீரென வள்ளுவரை முன்வைத்து இப்படியொரு சர்ச்சை கிளப்பப்படுவது ஏன்?

சாணக்கிய தர்மம்.!

சமூகம் எப்போதும் உன்னைச் சுற்றியே பேசிக்கொண்டிருக்குமாறு வைத்திருக்க வேண்டும்” என்பது சர்வாதிகாரத்துக்கான ஒரு சாணக்கிய வழிகாட்டல். அதைத்தான் ஹிட்லரும் முசோலினியும் கடைப்பிடித்தார்கள். இங்கே வள்ளுவருக்குத் திருநீற்றுப் பட்டையும் காவி அங்கியும் அணிந்த ஓவியத்தைப் பரப்புவது, முந்தைய பல சர்ச்சைத் தந்திரங்களின் தொடர்ச்சிதான். அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்துகிற உத்தி.

பெண்ணுரிமை உள்ளிட்ட இன்றைய சிந்தனை வளர்ச்சிகளுக்குப் பொருந்தாத சில குறட்பாக்கள் இருக்கவே செய்கின்றன. அந்த விவாதம் தனி. ஆயினும், வள்ளுவர் நெறிகளை எல்லாச் சமயத்தினரும் ஏற்கிறார்கள். மதநம்பிக்கை இல்லாதவர்களும் மதிக்கிறார்கள். அனைத்து மதங்களின் தலைவர்களும், பகுத்தறிவாளர்களும் திருக்குறளை மேற்கோள் காட்டத் தயங்குவதில்லை.

ஆனால், காவியாடை போட்டுவிட்டதை நியாயப்படுத்த வரும் சிலர், திருவள்ளுவரின் இந்து அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பேசுகிறார்கள். சில பழைய சிலைகளில் வள்ளுவர் மார்பில் பூணூல் இருப்பதைக் காட்டி, அதுவே அவர் இந்து என்பதற்கு அத்தாட்சி என்கிறார்கள். ஒரு வாதத்திற்காக இதை ஏற்பதென்றால், இந்து என்பதற்கு அத்தாட்சியான பூணூலை இந்துக்கள் என்று இவர்கள் கூறுகிற எல்லாச் சமூகத்தினரும் அணிந்துகொள்ளச் சம்மதிப்பார்களா? பூணூல் மாட்டிவிடும் சடங்கை, பெண்-ஆண் என்ற பேதமின்றி இந்துக்கள் எல்லோருக்குமாகச் செய்ய முன்வருவார்களா?

சில குறள்களில் இந்திரன், பிரம்மன் என்ற இந்துமதக் கடவுள்களின் பெயர்கள் வருகின்றன, அதுவே அவரை ஒரு இந்துவாகக் காட்டவில்லையா என்று கேட்கிறார்கள். எந்தச் சமூக அமைப்பில் வாழ்கிறோமோ அதில் பரவலாகப் புழங்குகிற சொற்களை எல்லாத் தரப்பினருமே கையாளுவது இயல்பு. இன்றும் கூட, பகுத்தறிவாளர்கள் சிலர் “அடக் கடவுளே” என்று சொல்லிவிடுவதுண்டு. அது ஆண்டுக்கணக்கான நாப்பழக்கத்திலிருந்து வருவது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த சொற்களை வள்ளுவர் தானும் கையாண்டது இயல்பானது. இந்து மதக்கடவுள்களின் பெயர்களை அவர் பயன்படுத்தினார் என்று சொல்கிறார்களே, அது அப்படி வந்ததுதான். அப்போதும் கூட வள்ளுவர் அந்தக் கடவுள்களுக்கான மத அடிப்படையிலான வழிபாடுகளையோ சடங்குகளையோ முன்வைக்கவில்லை. இந்தப் பெயர்களையும் கூட அவர், கடவுள் வாழ்த்துக்கென்றே ஒதுக்கிய குறள்களில் பயன்படுத்தவில்லை, வேறு அதிகாரங்களில்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்திரனும் பிரம்மனும்.!

ஒரு குறளில் இந்திரன் என்ற சொல் வருகிறது. அந்த இந்திரன் புராணங்கள் கூறும் தேவேந்திரன் அல்ல என்றும், சூரியனுக்கான மாற்றுச் சொல்தான் என்றும் சில ஆய்வாளர்கள் விளக்கியிருக்கிறார்கள். பிரம்மன் என்ற சொல்லை அவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை. “உலகியற்றியான்” என்றே சொல்கிறார். அதாவது உலகத்தைப் படைத்தவர் என்று பொருள். எல்லா மதங்களுமே இந்த உலகத்தைப் படைத்தது தங்களுடைய கடவுள்தான் என்றே சொல்கின்றன. அந்த வகையில் வள்ளுவர் கூறுகிற உலகியற்றியான் இந்து மதத்தின் பிரம்மனாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகியற்றியான் ஏன் கர்த்தராக இருக்கக்கூடாது – பைபிள் அப்படித்தானே சொல்கிறது? உலகியற்றியான் ஏன் அல்லாவாக இருக்கக்கூடாது – குரான் அப்படித்தானே சொல்கிறது?

உலகியற்றியான் என்ற சொல்லையே கூட வள்ளுவர், மக்கள் மற்றவர்களிடம் கையேந்திதான் பிழைத்திருக்க வேண்டும் என்ற நிலைமை இருக்குமானால் இந்த உலகத்தைப் படைத்தவன் அழிந்து போகட்டும் என்று நியாய ஆவேசத்தை வெளிப்படுத்தவே பயன்படுத்துகிறார். எல்லா மதங்களின் உலகியற்றியான்களுக்கும் இது பொருந்தும். “யார் யார் எப்படி வாழவேண்டும் என்று தீர்மானித்தது நானே, அதைக் கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும்” என்று கடவுளே சொன்னதாகக் கூறும் மதவாதத் தர்மத்திற்கும், “மக்களை சமமாகக் காக்க முடியவில்லை என்றால் ஒழிந்து போ” என்று எளிய மக்கள் மண்வாரிக் குமுறுவது போலக் கடவுளைச் சபிக்கிற மனிதநேயச் சீற்றத்திற்கும் என்ன தொடர்பு?

இதே எச்.ராஜா முன்பு “திருக்குறள் ஒரு இந்து மத நூல்” என்று பதிவிட்டிருந்தார். திருக்குறள் வந்த காலத்தில் இந்து மதம் என்பதே ஏது, அப்போது இருந்தது வேத மதமும் வைதீகமும்தானே என்று கேட்டார் பேராசிரியர் அருணன். அவருக்கு இவருடைய சீடர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள் இழிவான வசவுகளாக இருந்தனவேயன்றி ஒருவரும் அந்தக் கேள்விக்கு நேர்மையாகப் பதிலளிக்கவில்லை. வசவு ஒரு தர்மம் போல.

கல்வி உரிமைக்காகக் கல்லாமை அதிகாரம்.!

இன்னின்ன பிரிவினருக்குத்தான் கல்வி பயிலும் உரிமை உண்டு, மற்றவர்கள் கற்கக் கூடாது என்பதும் ஒரு தர்மம். அதை மறுத்து, கல்லாமை என்ற ஒரு அதிகாரமே எழுதி, எல்லோரும் கல்வி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் வள்ளுவர். அதற்காகவே வள்ளுவரைக் கொண்டாடுகிறார்கள் பெரியாரியலாளர்களும் கம்யூனிஸ்ட்டுகளும். அவர்கள் வள்ளுவரின் இந்து அடையாளத்தை அழித்துவிட்டார்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால், அனைவருக்கும் சமமான கல்வி என்ற உன்னத லட்சியத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்றுதானே பொருள்?

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்ட வேதமதக் கொள்கைகளை எதிர்த்துப் புறப்பட்டவைதான் சமண, புத்த இயக்கங்கள். அந்த இயக்கங்களின் தாக்கங்களோடுதான் வள்ளுவர் தன் எழுத்தாணியை எடுத்தார். கொல்லாமை அதிகாரத்தைக் கூட அவர் அன்று யாகங்களில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கு எதிரான கருத்தாக்கமாகவே எழுதினார் என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட அநீதியை, திருநீற்றுப் பட்டையும் காவி ஆடையும் அணிவிக்கப்பட்ட அரசியல் உள்நோக்கத்தை மதச்சார்பற்ற, ஜனநாயக, மனித உரிமை இயக்கங்கள் தள்ளுபடி செய்கின்றன. “அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயிலே மண்ணு” என்றொரு மகத்தான சொலவடையை உருவாக்கிய தமிழ் மக்களும், தங்களது தனிப்பட்ட இறை நம்பிக்கையும் மதப்பற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதா என்ற நியாயச் சீற்றத்தோடு இந்த அநீதியையும் அரசியல் நோக்கத்தையும் எள்ளித் தள்ளுவார்கள்.

அ.குமரேசன்-மூத்த பத்திரிகையாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..