ராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி

ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, புதிதாக சுயதொழில் துவங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சுயதொழில் துவங்குவோர் கடல் உணவுப்பொருள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் அதிக லாபம் பெறலாம். பனைமரம் சார்ந்த உபயோகப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுயதொழில் துவங்கும் நபர்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக இலாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.புதிய தொழில் முனைவோருக்கு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச சந்தைப்படுத்தும் தன்மையை ஒருங்கிணைங்க அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர நிர்ணய சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வ.அனந்தன், ராமநாதபுரம் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.ஆர்.சி.பாண்டியன், மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், ராமநாதபுரம் திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ரமேஷ்குமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவன பயிற்சி இயக்குநர் வி.கலைச்செல்வன், சிட்கோ கிளை மேலாளர் செ.சத்யராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மண்டல மேலாளர் வி.டி.அனந்தன், பேராசிரியர் சு.வெங்கட நாராயணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..