சர்ச்சைக்குரிய ‘நிலம்’ தீர்ப்பும், மக்களின் கட்டுப்பாடும்..!

அயோத்தி விவகாரம் முடிவுக்கு வர வேண்டும், நாடு தன் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பதே மக்களை நேசிக்கிறவர்கள் விருப்பம். பாபர் மசூதி இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமாக அறியப்பட்ட, ‘சர்ச்சைக்குரிய’ இடமாக மாற்றப்பட்ட, ராமஜென்மபூமியாக பெயர் சூட்டப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

ஆனால், விமர்சனங்கள் இல்லாமல் வரவேற்றுவிடவில்லை. தீர்ப்பின் பல அம்சங்கள் கேள்விக்கு உரியவை என்ற சுட்டிக்காட்டலோடுதான் ஏற்கப்பட்டிருக்கிறது. கொண்டாட்டம், போராட்டம் இரண்டுமே கூடாது என்ற வேண்டுகோளும், இரு தரப்பு மக்களும் உணர்ச்சித் தூண்டல்களுக்கு இரையாகிவிடக்கூடாது என்ற அக்கறையோடு விடுக்கப்படுகிறது.

இந்திய தொல்லியல் துறை தாக்கல் செய்த ஆவணங்களின்படி, காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை எனக் கூறியுள்ள நீதிபதிகள், ஆனால் ஏற்கெனவே இருந்த ஒரு கோவில் இடிக்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அப்படியானால் நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பளிப்பது சரிதானா என்ற கேள்வி எழுவது இயல்பு – காலம்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

1857 வரையில் அந்த இடம் தங்கள் பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரத்தை முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்யத் தவறிவிட்டதாகத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இரு தரப்பாருக்கும் இடையே பிரச்சினை நீடித்ததால் 1856ல் அங்கே அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சுவர் கட்டிப் பிரித்தது. அதன் வெளிப்பகுதியில் இந்துக்களும், உட்பகுதியில் முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்திருக்கிறார்கள். இதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அப்படியானால், 1856 வரையில் பிரச்சினை நீடித்தது என்றால் முஸ்லிம் மக்களும் பயன்படுத்தி வந்தார்கள் என்பதுதானே எளிய உண்மை?

இது வழக்கமானதொரு உரிமையியல் வழக்குதான் என்றால் உள்ளூர் நீதிமன்றங்களே எப்போதோ முடிவுக்குக் கொண்டுவந்திருக்கும். இந்த வழக்கோடு கட்டப்பட்டு வந்துள்ள அரசியலையும், கிளறப்பட்டு வந்துள்ள சமூகப் பிரச்சனைகளையும், வளர்க்கப்பட்டு வந்துள்ள வன்முறைகளையும் ஒதுக்கிவிட முடியாது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒன்று என ஒரு நீதிபதியே கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இதையும் கவனத்தில் கொண்டு, பாபர் மசூதிக்குள் 1949ல் ராமர் சிலை கொண்டு போய் வைக்கப்பட்டது சட்டவிரோதச் செயல், 1992ல் மசூதி தகர்க்கப்பட்டது பெரும் குற்றம் என்று கூறியிருக்கிறது.

அதே உணர்வோடு, நாடு முழுவதும் ரத்தம் சிந்தவைத்த, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும் தலைவர்களாகப் பவனி வந்த பாபர் மசூதி இடிப்புக் குற்றம் தொடர்பான வழக்கை விரைந்து நடத்தி முடிக்கவும், குற்றத்திற்கான தண்டனையை அறிவிக்கவும், இந்த வழக்கை விரைந்து விசா ரித்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருக்கலாமே? அப்படி அறிவுறுத்தியிருந்தால் கூடுதல் மதிப்புப் பெற்றிருக்கும்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு ஒரே காலத்தில் கோவிலும் மசூதியும் கட்டப்பட்டு எழுமானால், இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்பாடும், இந்திய மக்களின் நல்லிணக்கப் பாரம்பரியமும் உலக அரங்கில் கவனத்தை ஈர்க்கும், கம்பீரம் சேர்க்கும். அதற்கு அடிப்படையாக, ஆத்திரமூட்டல் முயற்சிகள் தொடராது; சிறுபான்மை மக்களின் இதர வழிபாட்டுத் தலங்கள் மீது கைவைக்கப்பட மாட்டாது; பகை வளர்க்கப்பட மாட்டாது என்பதற்கு உத்தவரவாதம் வேண்டும். சமரசக்குழுவின் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் இதை வலியுறுத்தியதாகவும், எதிர்த்தரப்பினரில் ஒரு பிரிவினர் அதை ஏற்க மறுத்ததாகவும செய்தி உண்டு.

இந்த உத்தரவாதத்தை அளிக்கிற முதல் பொறுப்பு மத்திய அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் இருக்கிறது. மற்ற கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் அதை உறுதிப்படுத்த வேண்டும். சமுதாயத்தில் முதன்மையான பொறுப்பு பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களுக்கு இருக்கிறது. எங்கள் நம்பிக்கையை சூதாட்டமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக மக்கள் முடிவெடுக்க வேண்டும்.

வீண் வாக்குவாதங்களுக்கோ மோதல்களுக்கோ இட்டுச் செல்வதாகிவிடக் கூடாது என்ற அக்கறையோடு, கருத்துகளை வெளிப்படுத்துவதில் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இதையெல்லாம் திறந்தமனதோடு விவாதிக்கிற சூழல் வரட்டும். அப்போது தீர்ப்பின் முழுத்தாக்கம் எப்படி அமையும் என்ற புரிதலும் ஏற்படும்.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..