சர்ச்சைக்குரிய நிலம் தீர்ப்பு,இனி சர்ச்சைகள் முடிவுக்கு வருமா.?

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில்இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இருந்துவந்த நீண்ட பிரச்னை, இந்தத் தீர்ப்பின் மூலமாக ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரித்தேகருத்து தெரிவித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்துத்தலைவர்களும் மக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2010ல் அலகாபாத் நீதிமன்றம், நிலத்தை மூன்றாக பிரித்ததே தவறு என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தற்போது, அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு வக்பு போர்டு ஏற்கும் இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு கருதியும், வசதி கருதியும் நேற்று இரவு தீர்ப்பு நேரம் அறிவிக்கப்பட்டு இன்று(9/11/2019) காலை தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாகவே, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் சாதாரணமாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் நாம் நிரூபித்திருக்கிறோம். தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டாலும்,சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படித்த பின்னர், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.

அவ்வாறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை தொடர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தீர்ப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், தீர்ப்பினை அமல்படுத்த கால தாமதம் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image