போலீசார் லத்தியால் தாக்கியதால் விபத்தில் சிக்கிய இளம்பெண் மனவேதனையில் தற்கொலை: செங்குன்றத்தில் சோகம்.!

 செங்குன்றம் அடுத்த நல்லூர், சிவந்தி ஆதித்தன் நகர், ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் யுவனேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி (25). இவர்களுக்கு கடந்த 5 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி மாலை செங்குன்றத்தில் இருந்து மொபட்டில் பிரியதர்ஷினி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காந்தி நகர் போலீஸ் பூத் அருகே சாலை வளைவில் திரும்பியபோது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசார் லத்தியால் பிரியதர்ஷினியின் மொபட்டை அடித்து நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன பிரியதர்ஷினி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பிரியதர்ஷினி இடுப்பு மற்றும் கால்களில் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, போலீசாரின் அடாவடி போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள போலீஸ் பூத் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தி நகர், சிவந்தி நகரை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்து பிரியதர்ஷினி வீடு திரும்பினார். ஆனாலும், அவரது 2 கால்களும் முறிவு ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல், மனவேதனையுடன் காணப்பட்ட பிரியதர்ஷினி  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..