Home செய்திகள் கொடைக்கானலில் கன மழை,மலைக்கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் உடைந்தது.!
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடியது.
சாலைகளில் மரங்கள் சாய்ந்ததாலும், மண்சரிவாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்பட்டி ஊராட்சி பகுதியில் பள்ளங்கியிலிருந்து கோம்பை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கனமழையின் காரணமாக அடித்து செல்லப்பட்டது.
இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு பாலம் உடைந்தது. இதன்காரணமாக கோம்பை பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அவர்கள் தங்களது ஊரிலிருந்து கொடைக்கானல் வில்பட்டி மற்றும் வெளியூர்களுக்குச் செல்ல, குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல இந்த பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு உரிய மாற்றுப்பாதை கிடையாது.
கோம்பை பகுதியானது முழுவதும் விவசாயம் சார்ந்த கிராமமாகும். இங்கு உருளை,கேரட்,பீன்ஸ் போன்ற பல்வேறு வகையான பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அறுவடை செய்யும் இப்பயிர்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!