கொடைக்கானல் வராதீங்க… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கனமழை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இன்றும் நாளையும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானலில் நேற்று முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளங்கி சாலையில் முறிந்து விழுந்த மரத்தினை நெடுஞ்சாலை துறையினர் கொட்டும் மழையில் அப்புறப்படுத்தினர்.

மேலும் இன்று 31.10.19 வத்தலக்குண்டு சாலையிலும் 2 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பிறகு வாகனங்கள் மெதுவாக செல்ல அனுமதிக்கப்பட்டன. கன மழை காரணமாக கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் பல இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் இருந்து 12 கி.மீ சுற்றளவில் உள்ள கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பார்க், ரோஜா பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

மலைச்சாலையில் தொடர்ந்து மரங்கள் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் இன்றும் நாளையும் மலைச்சாலையில் கவனமாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.இடைவிடாது மழை பெய்து வருவதால் கொடைக்கானல் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image