வாணாபுரம் அருகே மழை பெய்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் சிலை ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியுள்ளன. ஏரி மற்றும் குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழக அரசு சீரமைத்து வருகிறது. அந்த வகையில் வாணாபுரம் பகுதியிலுள்ள குங்கிலிய நத்தம், சதா குப்பம் மற்றும் தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளும் சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது ஏரிக்கரைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஏரிக்கு வரும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும், தூர்வாராததாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது வெகுவாக குறைந்து போனது.வாணாபுரம் அருகே உள்ள நரியாப்பட்டு, தச்சம்பட்டு, சர்க்கரதான்மடை, சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஏரிகள் வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தச்சம்பட்டு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் சிறிதளவுகூட வரவில்லை. மேலும் ஏரி பகுதிகளுக்கு வரும் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போனதாலும், கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்று போனது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதியில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டுவது கிடையாது.சாத்தனூர் அணையின் தண்ணீரை நம்பியே நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய சூழல் உள்ளது. தற்போது சாத்தனூர் அணைக்கும் தண்ணீர் குறைவாக வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுமா? என்பது தெரியவில்லை.மேலும் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பார்களா? திறக்க மாட்டார்களா? என்றும் தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கால்வாய்களை தூர்வாரினால் மழையினால் வரும் தண்ணீர் ஏரிக்கு செல்ல வசதியாக இருக்கும்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image