கமுதி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாற்று கரை நரசிங்கம்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையானவை.புதையல் இருப்பதாகக் கருதி இப்பகுதியில் சிலர் தோண்டினர். அதில் முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மூலம் இதை அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன், நிறுவனத தலைவர் வே.ராஜகுருவிடம் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் அப்பகுதியை ஆய்வு செய்த பின் ராஜகுரு கூறியதாவது:

குண்டாற்றின் கிழக்கு கரையில் சரளை மண் மற்றும் பாறைகள் உள்ள ஒரு மேட்டுப்பகுதியாக உள்ள இவ்வூரின் ஒரு பகுதியில், புதைந்தநிலையில் இரு முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதன் மேற்பகுதிகள் உடைந்துள்ளன. இதன் உள்ளே கருப்பு சிவப்பு வண்ண மெல்லிய, தடித்த பானைகளின் ஓடுகள், உடைந்த கல் வளையம் ஆகியவை இருந்துள்ளன. ஒரு முதுமக்கள் தாழி 78 செ.மீ. விட்டத்தில் 1 இஞ்ச் தடிமனில் உள்ளது. மற்றொன்று அளவில் இதைவிடச் சிறியதாக உள்ளது. ஒரு தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடு காணப்படுகிறது. மனிதன் இறந்தபின் மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் தாழிகள் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிறு போன்று அமைக்கப்படுகிறது.

இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி V வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். பிற்காலத்தில் தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.கி.மு.1000 முதல் கி.மு.300 வரை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடான இப்பகுதி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதி தவிர மற்ற இடங்களின் மேற்பகுதியில் பானை ஓடுகள் ஏதும் காணப்படவில்லை.

பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்பகுதியில் இரும்பின் மூலப்பொருள்கள் மற்றும் நுண்கற்கால செதில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image