வெடிக்காத ‘விதை பட்டாசுகள்’; தோட்டக்கலை துறை அசத்தல்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், தமிழக தோட்டக்கலைத் துறை ‘விதை பட்டாசு’ விற்பனையை துவக்கியுள்ளது.துரித உணவுகளின் வருகையால், காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே குறைந்துள்ளது. இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்படுகின்றனர். அத்துடன், மரங்கள் குறைவால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், காய்கறி செடிகள் சாகுபடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக தோட்டக்கலைத் துறையினர் ‘விதை பட்டாசு’களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.  சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, மாதவரம் தோட்டக்கலை பூங்கா, அண்ணாநகர், திருவான்மியூர் தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றில் இவைகள் விற்கப்பட உள்ளன.

இது குறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; “களிமண், விதைகள், நுண்ணூட்டச் சத்துக்கள், உரங்களை பயன்படுத்தி சங்கு சக்கரம், ராக்கெட், புஸ்வாணம், சுறுசுறு வர்த்தி வடிவில் இந்த விதை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவைகளில், கத்திரி, வெண்டை, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள், நாவல், புளி உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகள் உள்ளன. இந்த விதை பட்டாசின் விலை ஐந்து ரூபாய். இந்த பட்டாசை வெடிக்க முடியாது; வெடியின் மாதிரி வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள விதை பந்துகள்தான் இவை.இந்த வெடி பட்டாசுகளை வாங்கி, தீபாவளி நாளில் விதைத்து, சுற்றுச்சூழலுக்கு மக்கள் உதவலாம். அத்துடன், தங்களின் தேவைக்கான காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம்” என்று, அவர் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..