Home செய்திகள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா – எம்.எல்.ஏ வை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு..

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா – எம்.எல்.ஏ வை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு..

by ஆசிரியர்

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் பல அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் மாரியப்பனின் வீட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தகவல் வேகமாக பரவியதையடுத்து பொதுமக்கள் திரண்டனர். அப்போது வீட்டில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட சிலர் இருந்ததாகவும், சிலர் பணம் கொடுத்து கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது. இதை அறிந்த அரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் பணப்பட்டுவாடா செய்யும் அம்பலத்தில் உள்ள வீட்டிற்கு வந்து நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று தி.மு.க.வினரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். அதில் அவர்கள் காயம் அடைந்தனர்.மேலும் அவர்களின் கையில் இருந்த துண்டு பிரசுரம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக்கிடந்தன.

இதையடுத்து 4 பேரையும் அந்த வீட்டிற்குள் வைத்து பூட்டினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் வெளியே அழைத்து வந்தபோது அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பறக்கும்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் 3 பேரிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பத்மநேரி பஸ் நிறுத்தம் அருகே அதிகாரிகளை பார்த்ததும் 5 மர்ம நபர்கள் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள். பின்னர் அதிகாரிகள் கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினார்கள். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!