வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவர் சாதனை..!

இந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் (17). இவர், அதிகரித்துவரும் சாலை விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் வகையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் அணியும் பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை கண்டு பிடித்தார்.

இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி, ஹெல்மெட்டில் ஏற்படும் அதிர்வை கணித்து, அது விபத்தினால் ஏற்பட்ட அதிர்வா அல்லது சாதாரணமாக ஏற்பட்ட அதிர்வா என்பதை கண்டுபிடித்து, விபத்தாக இருக்கும்பட்சத்தில் உறவினருக்கோ அல்லது போலீஸாருக்கோ குறுஞ் செய்தி அனுப்பும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு அவருடைய உயிரை காப்பாற்ற முடியும்.இந்நிலையில், இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த 9ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை சர்வதேச அளவிலான 19 வயதிற்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான  போட்டி நடைபெற்றது.

இதில், இலங்கையிலிருந்து 12 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளுடன் கலந்து கொண்டனர். இவர்களில், பாதுகாப்பான தலைக்கவசம் கண்டுபிடித்த கல்முனை மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்றார்.பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று (16ம் தேதி) நடைபெற்றது. அப்போது மாணவரை பாராட்டி பேசிய கல்லூரி அதிபர், “தேசிய அளவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கலந்துகொண்ட மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்று எங்கள் பாடசாலைக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தந்துள்ளார்” என தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவர் முகேஷ் ராம் கூறுகையில், “ஆசிய நாடுகளில் பெரும்பாலும் இருசக்கர வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இதனால், இருசக்கர வாகன ஓட்டுனர்களே அதிகமாக விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். இவற்றை தவிர்க்கும் நோக்கில் எனது கண்டுபிடிப்பு அமைந்ததால், சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image