
கடந்த சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கீழக்கரை நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள்(B L 0)மற்றும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பெற்று வந்தனர்.இந்தநிலையில் அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் முறையாக அறிவிப்பு செய்யாத நிலையில் இந்த ஆவணங்களை கொடுக்க பொதுமக்கள் தயங்கினார்கள்.பலர் இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டதற்கு அரசு எந்த அரசு ஆணையும் பிறப்பிக்கவில்லை.வாய்மொழி உத்தரவு என்று கூறினார்கள்.
இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பலர் பல வித கருத்துக்களை பதிவு செய்து கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என்று எந்த ஆதாரமும் இன்றி பதிவு செய்து வந்தனர்.
இன்று கீழக்கரை ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து பேசிய கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா,கீழக்கரை வருவாய் ஆய்வாளர் சாரதா லட்சுமி ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டை மறு சீராய்வு அடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்றும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட், குடிநீர் இணைப்பு ரசீது, வங்கி புத்தகம், வீட்டு வரி ரசீது மற்றும் புகைப்படம் ஒட்டிய ஏதாவது ஒரு ஆவணம் மட்டும் போதும் என்றும் இது மற்றுமின்றி கீழக்கரை தாலுகா அலுவலக இணையதள மெயிலான [email protected] மொபைல் மற்றும் கணணி மூலமாக கூட இணைக்கலாம் என்றனர்.
இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில் கடந்த சில நாட்களாக இது சம்பந்தமாக பல விதமான பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வந்தது.இன்று வரை கூட அரசு அல்லது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று எதையும் அதிகாரிகள் காட்டவில்லை. இதனால் இதன் உண்மை தன்மையை அறிய தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படையில் கடந்த 11/10/2019 அன்று மனு செய்து இருக்கின்றோம்.மாநில தேர்தல் ஆணையம் தரும் பதிலுக்காக காத்திருக்கின்றோம் என்றார்.