”ராஜிவ் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை..!” – புலிகள் பெயரில் அறிக்கை

எந்தவொரு இந்திய தலைவருக்கோ, இலங்கையைச் சேர்ந்த தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை, திட்டம் தீட்டவுமில்லை; ராஜிவ் காந்தி படுகொலைக்கு நாங்கள் காரணம் அல்ல” என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ் காந்தி படுகொலை குறித்து பேசினார். அவரது பேச்சு, ராஜிவ் காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியதாக பொருள்படும்படியாக அமைந்தது. விடுதலைப் புலிகள் தீவிரமாக இயங்கியபோதே, அந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறினர்.

ஆனால், சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், தமிழின உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், ‘சீமான் தனது அரசியல் லாபத்துக்காக இப்படி பேசுவது, சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக திரும்பும். மேலும் அது, ஏழுபேர் விடுதலைக்கும் பாதகமாக அமையும்’ என்று கூறப்பட்டது.இந்நிலையில், விடுதலைப் புலிகள் சார்பில் லதன் சுந்தரலிங்கம், குருபரன் சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சார்ந்த எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை; திட்டம் தீட்டவுமில்லை.

குறிப்பாக, எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை. எங்கள் ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும்கூட, புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜிவ் காந்தி கொலையுடன் தொடர்புபடுத்துவதைக் காணும்பொழுது, இந்தக் கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image