இராமேஸ்வரத்தில் கலாம் பிறந்த நாள் கோலாகல கொண்டாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின 89வது பிறந்த நாளையொட்டி, ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கலாம் நினைவிடத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (மது விலக்கு) தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையோர் எழுச்சி தினமாக ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப் பட்டது.ராமேஸ்வரம் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை, ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தார். மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வர்த்தகன் தெருவில் கலாம் பயின்ற தொடக்கப்பள்ளி யில் நிறைவடைந்தது. மாணவ, மாணவியர் இளைஞர் தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். தலைமை ஆசிரியர்கள் சந்தானவேலு, கமலா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயகாந்தன், ஜீவா, அந்தோனி முத்து, தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி, மற்றும் பலர் பங்கேற்றனர்.ராமேஸ்வரம் பொது நூலக வாசகர் வட்டம் மற்றும் அரசு பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கலாம் பிறந்த நாள் வாசிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட நூலகர் கண்ணன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட தலைவர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் கட்டி கொடுத்த புத்தக வாசிப்பரங்கில் வைக்கப்பட்டிருந்த கலாம் படத்திற்கு மாணவர், மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தி வாசிப்பு உறுதிமொழி ஏற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட ராமநாதபுரம் மாவட்ட தொடர்பு அலுவலர் ரவி சிறப்புரை ஆற்றினார்.கிளை நூலகர் காசி வரவேற்றார். நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம், பசுமை ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, கம்பன் கழக பொருளாளர் ராமு வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் செந்தில்வேல், இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர். பாம்பன் கிளை நூலகர் ரிசாலத் அலி நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..