இலங்கை ஜனாதிபதி தேர்தல்; சில முக்கிய தகவல்கள்..!

யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சில முக்கிய தகவல்கள்.இலங்கையில் நடைபெற்று வந்த பிரதமர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, இலங்கை மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்தல் வேண்டும் என்பதும் அவசியமாகின்றது.

ஜனாதிபதியாக பதவி வகிப்பவரே அரசின் தலைவராகவும், படைகளின் தலைவராகவும் இருத்தல் வேண்டும் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.இந்நிலையில், இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முறை அறிவிக்கப்பட்ட 1978ம் ஆண்டு முதல் இதுவரை 7 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள தேர்தல் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.அது தொடர்பான சில முக்கிய தகவல்கள்:

ஆட்சியிலுள்ள ஜனாதிபதி, ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு தேர்தல் இது.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்).

அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்).

இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது).

கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக பெண்ணொருவர் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (இறுதியாக, 1999ம் ஆண்டு தேர்தலில் பெண்கள் போட்டியிட்டனர்).

இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்).

ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.

நீளமான வாக்குச்சீட்டு கொண்ட தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் அதிகம்).

சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது தேர்தல். (இதற்கு முன்னர், தேர்தல் திணைக்களத்தின் கீழ் நடத்தப்பட்டன).

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..