இராமநாதபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது: கருவுற்ற பெண்களின் நலனுக்காகவும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கருவுற்ற தாய்மாரின் மனம் மகிழ்ந்திடும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாக்களில் 1,640 கர்ப்பிணிகள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.கருவுற்ற தாய்மார்கள் மனஉளைச்சல் இல்லாமல் சந்தோசமான மனநிலையில் இருந்திட வேண்டும்.சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல கர்ப்ப காலத்தில் முறையான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்..மத்திய அரசு இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக தேர்ந்தெடுத்துள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் செப்டம்பர் 2019 முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு ஊரகப் பகுதிகளில் ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்கள் சுத்தம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வயிற்றுப்போக்கை தடுத்தல் ரத்த சோகை தடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பேசினார். கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வா.ஜெயந்தி ராமநாதபுரம் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் வட்டார மருத்துவர் மகேஸ்வரி, குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட வட்டார அலுவலர்கள் கலா ( ராமநாதபுரம் ), மீனாட்சி சுந்தரேஸ்வரி (திருப்புல்லாணி), பாலாம்பிகை (மண்டபம்), போஷான் அபியான் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா, திட்ட உதவியாளர் ஷாலினி உட்பட அரசு அலுவலர்கள் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..