ஆதரவற்ற முதியோர்களின் துயர் துடைப்போம் – அக்.1 முதியோர் தின சிந்தனை

ஆதரவற்ற முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த உலகில் லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடல் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1 இன்று உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய அவசர உலகில் குடும்ப உறவுகளை பேணுதல் என்பது வெற்றிடமாக காட்சியளிக்கிறது. மேலும் குடும்ப அமைப்புகளை சிதைக்கும் வண்ணம் பிரபல தொலைக்காட்சிகள் தங்களின் வருமானத்தை பெருக்கி சுயலாபம் அடையும் நோக்கில் சீரியல்கள் என்ற பெயரில் சீரழிவு கலாச்சாரங்களை, குடும்பங்களை தனிமைப்படுத்தி தனிமனித சுயநல சிந்தனைகளை திணிக்க முயல்கிறது.

பெற்றெடுத்த தன் பிள்ளைகளால் தன் முதிய வயதை அடைந்த பெற்றோர்கள் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல் வாழும் ஆதரவற்ற நிலைக்கு முதியோர்கள் தள்ளப்பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது. மனித சமூகத்தின் இந்த அவல நிலை மாற்றப்பட வேண்டும். ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் ஆதரவற்ற முதியவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

தற்போதைய நிலையில் 60 வயதினை கடந்தவர்கள் முதியோராக கருதப்படுகின்றனர். முதியோர்களின் அறிவு மற்றும் வழிகாட்டுதல் இன்றைய சூழலில் நம் இளம் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே அவர்களை சுமையாக கருதாமல் மகிழ்வுடன் கவனிக்க பாதுகாக்க முன்வருவோம்.ஏனெனில் நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி வீட்டில் உள்ள பெரியவர்களை, முதியவர்களை ஆதரவற்றவர்களை கவனிக்க முன் வருவோம்.

இந்த உலகில் 60 முதல் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 70 கோடியாக உள்ளது.இது 2050 ஆம் ஆண்டுக்குள் 200 கோடியாக உயரும் என ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது.இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர். இது 2026ல் 12.5 சதவீதமாகவும், 2050ல் 20 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதியோர்களை பாதுகாப்பு தொடர்பான தற்போது உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.அதே வேளை அவர்கள் அடையும் துன்பங்கள்,வாழ்வாதார பிரச்சினைகளை அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த சர்வதேச முதியோர் தினம் உணர்த்துகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image