குடிமராமத்து திட்ட கண்மாய் புனரமைப்பு பணிகள்.. வெளிப்படைத் தன்மை இராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு…

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர், சம்பை கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்தார்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் வெண்ணத்தூர் கண்மாய் ரூ.99 லட்சம் மதிப்பிலும்,சம்பை கண்மாய் ரூ.39 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழ்வைகை வடிநில கோட்டம் பரமக்குடி கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம் மதுரை கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு,அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடன், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்க பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. 69 கண்மாய்களில் 211.47 கி.மீ நீள அளவிற்கு கரைகள் பலப்படுத்துதல், 127.90 கி.மீ நீள அளவிற்கு வரத்துக்கால்வாய் புனரமைத்தல், 6.3 கி.மீ நீள அளவிற்கு உபரி நீர் வடிகால் புனரமைத்தல், 112 மடைகள் மராமத்து செய்தல் 133 மடைகள் மீளக்கட்டுதல், 41 கலுங்குகள் மராமத்து செய்தல், 10 கலுங்குகள் மீளக்கட்டுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாயை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்புனரமைப்பு பணிகள் ஜூலை துவங்கப்பட்டு செப்.30க்குள் முழுமையாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்பட்டது. குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும்,வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையை குறியீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சீமைக்கருவேல மரங்களை பாரபட்சமின்றி அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவிக்க முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்
பரிசு ரூ.10 லட்சம், 2-ஆம், 3-ஆம் பரிசு தலா ரூ.5 லட்சம் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பிரபு, ஆனந்த்பாபுஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image