மதுரை மாநகர காவல் நிலைய சரகங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ள போலீஸ் பாய்ஸ் கிளப்களை நிர்வகிக்க தன்னார்வ தொண்டர்களுக்கு காவல்துறையின் அழைப்பு

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்,  உத்தரவின்பேரில் மதுரை மாநகரில் உள்ள 20 காவல்நிலைய சரகங்களிலும், தனித்தனியாக போலீஸ் பாய்ஸ் கிளப் (Police Boys Club) ஆரம்பிக்கப்பட உள்ளது. போலீஸ் பாய்ஸ் கிளப் மூலம் சிறுவர்களையும், இளைஞர்களையும் நல்வழிப்படுத்தவும், படிப்பிலும், விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்தவும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

போலீஸ் பாய்ஸ் கிளப் அமைய உள்ள பகுதிகளில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வகை புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அரங்கத்தில் இருக்க ஆவண செய்யப்படும்.

சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் அரங்கத்தில் உள்ள விளையாட்டு சாதனங்கள் மற்றும் புத்தகங்களை பயன்படுத்தி தங்களது நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் கணினி, தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி போன்ற மின்னனு சாதனங்களை அதிக அளவில் சிறுவர்கள், சிறுமியர்கள் உபயோகப்படுத்தி வரும் இக்காலக்கட்டத்தில், குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கிடைக்கும் நற்பயன்களாலும், புத்தகங்களை படிப்பதனால் ஏற்படும் பல்வேறு நலன்களாலும் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக அவர்களை உருவாக்க போலீஸ் பாய்ஸ் கிளப் மூலம் உதவி செய்யப்படும்.

மதுரை மாநகரில் தொடங்கப்படவுள்ள போலீஸ் பாய்ஸ் கிளப்களை (Police Boys Club) காவல் துறையின் மேற்பார்வையில் நிர்வகிக்க தகுதி வாய்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை மதுரை மாநகர காவல்துறை வரவேற்கின்றது. சமூக சேவை செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள், விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், கல்வி பயிற்றுவித்தலில் அனுபவமுள்ளவர்கள், குழந்தைகளை நல்வழியில் நடத்தும் அனுபவம் பெற்றவர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் சமூக சிந்தனையாளர்கள் ஆகியோர்கள்அவர்களது திறமைகள் மற்றும் அனுபவத்தின் மூலம் சிறுவர்கள், சிறுமியருக்கு உதவவும், அவர்களை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டுவரவும் உதவி செய்யவும் வரவேற்கப்படுகின்றனர்.

போலீஸ் பாய்ஸ் கிளப்களை (Police Boys Club) நிர்வகிக்க விருப்பமுடைய தன்னார்வ தொண்டர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, தங்களது பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இது பற்றிய விபரங்களை அறிய மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றத்தடுப்பு பிரிவு அலுவலக எண்ணை (0452-2346302) தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..