Home செய்திகள் அம்பத்தூரில் இயங்கும் பிரபல இட்லி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அம்பத்தூரில் இயங்கும் பிரபல இட்லி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

by mohan

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் இட்லிகடை முருகன் காபி நிலையம் என்று 1991ல் மதுரையில் தொடங்கப்பட்டு பிரபலமாகி பின் முருகன் இட்லிகடை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

மிகவும் பிரபலமான இந்த உணவகத்திற்கு சென்னையில் 17 கிளைகள் உள்ளது. அதேபோல் மதுரையில் 3 மற்றும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகள் உள்ளது.இந்த பிரபலமான கடையின் உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்ததன் அடிப்படையில் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முருகன் இட்லி கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

முருகன் இட்லி கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட உணவுகள், சமைப்பதற்கு முன் இருக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனை செய்ததில் சரியான சுத்தம் கடைபிடிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றவுமில்லை.

இது மட்டுமில்லாமல், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இட்லி கடைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அது அதற்கான இடத்தில் வைக்கப்படவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் பிரபலமான முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!