தொடர் மழையால் வடகரை அடவி நயினார் நீர்த்தேக்கம் நிரம்பி மதகு உடைப்பு-விரைந்து சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை.

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பியது.அந்த வகையில் பண்பொழியை அடுத்த மேக்கரை அருகே உள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமும் கடந்த வாரம் நிரம்பியது. அந்த அணை முழு கொள்ளளவான 132 அடியையும் எட்டி தண்ணீர் வழிந்தோடியது.

அணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து, விவசாய பயிர்களுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை 90 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால் அணை திறக்கப்பட்ட அன்றே மதகு வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து மதகு சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது.இந்த நிலையில் 08.09.19 ஞாயிறு மாலை மதகு திடீரென உடைந்தது. இதனால் மதகில் இருந்து கால்வாய் மேல் சாலையில் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.திடீரென அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் அடவிநயினார் அணையில் இருந்து வடகரை செல்லக்கூடிய சாலையில் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.பயிர் சாகுபடிக்காக சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அணைப் பகுதியில் திரண்டனர்.பெரும் பரபரப்புடன் அடவி நயினார் அணை காணப்பட்டது.

மேலும் இது பற்றிய தகவல் அறிந்ததும் செங்கோட்டை தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மதகு உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடு அதனை சரி செய்யும் நடவடிக்கையை உடனடியாக தொடங்கினர்.மதகு உடைப்பு காரணமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறுகிறது. விவசாயத்திற்காக சேமிக்கப்பட்ட தண்ணீர் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் அணையின் தண்ணீர் முற்றிலும் வறண்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு பிசான சாகுபடி கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும், அணையின் ஷட்டர் பழுதை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..