விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திநகர் மைதானத்தில் நிற்கும்-கலெக்டர் கந்தசாமி தகவல்

விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திநகர் மைதானத்தில் நிற்கும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் வேட்டவலம், திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பஸ் நிலையம் சென்றடைகிறது.அதே போன்று திருக்கோவிலூரில் இருந்து வரும் பஸ்கள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பஸ் நிலையம் சென்றடைகிறது.இந்த 2 வழி தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்படுவதால் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்படுவதாக கலெக்டருக்கு தகவல் வந்தது.இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் மேம்பால பணி நிறைவு பெறும் வரையில் காந்திநகர் மைதானம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.இது பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் வணிக நோக்கத்திற்காக வரும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். மேலும் இந்த இரண்டு வழித்தடங்களில் இருந்து பஸ் நிலையம் செல்ல வேண்டிய பயணிகளை காந்திநகர் தற்காலிக பஸ் நிலையம் வழியாக திண்டிவனம் சாலை சந்திப்பு காந்திநகர் லட்சுமிபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அருகில் இறக்கிவிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..