தாம்பூல பையுடன் விதைப்பந்து; அரசு அதிகாரி அசத்தல்..!

ராமேஸ்வரத்தில், மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளை வழங்கிய அரசு அதிகாரியின் செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, ராமேஸ்வரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு, மணமகள் வீட்டின் சார்பில் துணியிலான தாம்பூல பை வழங்கப்பட்டது. அந்தப் பைக்குள் இருந்த அட்டைப்பெட்டியில் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நெல்லி, நாவல் போன்ற விதைப் பந்துகள் இருந்தன.அத்துடன், ‘இது, இயற்கை அன்னையை காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்’ என்ற வாசகமும் தாம்பூலப் பையில் பொறிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ராமநாதன் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அலுவலக ரீதியாக அனுப்பப்பட்டேன். அங்கு, கஜா புயல் ஏற்படுத்திய தாக்குதலினால் மரங்கள் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது.அப்போதே, ‘வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு பதிலாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என மனதில் நினைத்தேன். இதையடுத்து, எனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விதைப் பந்துகளை வழங்கிட முடிவு செய்தேன்.அதற்காக, அவினாசி பகுதியிலிருந்து 6,000க்கும் அதிகமான விதைப் பந்துகளை வாங்கி வந்து ஒவ்வொரு பாக்கெட்டிலும் 6 விதைப் பந்துகளை வைத்து வழங்கினேன்” என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..