இராமநாதபுரம் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வு 32,879 பேர் எழுதவுள்ளனர்..மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் 01.9.2019 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் -ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்விற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை 1, நிலஅளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்வதற்காக ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது ராமநாதபுரம் மாவட்டத்தில் 01.9.2019 (ஞாயிற்றுக்கிழமை)அன்று நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்த 32,879 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இத்தேர்வை அமைதியான முறையில் நடத்த ஏதுவாக 107 இடங்களில் உள்ள 128 தேர்வு மையங்களில்
தேவையான அளவு தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படை குழுக்கள்,வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 27 நிறுத்தும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்களுக்கு தேவையான தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் அந்தந்த தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ப வேண்டும்.தேர்வு நாளில் தேர்வு எழுதும் நபர்கள் சிரமப்படாதவாறு போதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்பாக மாவட்ட கருவூலம் கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இத்தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளை எவ்வித பாரபட்சமுமின்றி பின்பற்றி அமைதியான முறையில் இத்தேர்வை நடத்த பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.ராமன் (பரமக்குடி)கோபு,(ராமநாதபுரம் பொறுப்பு)மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.மதியழகன் மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.முத்துச்சாமி,பாலதண்டாயுதபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் என்.கோட்டீஸ்வரன்,ஜி.பிரசாத் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.