மதுரை – விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற 02.09.2019 ந்தேதி மதுரை மாநகரில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனா போன்ற பல இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை மதுரை மாநகரில் பல இடங்களில் நிறுவி ஓரிரு நாட்கள் கழித்து தனித்தனியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்வதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை ஏற்படுத்த அரசை அறிவுறுத்தியதின்படி சிலைகளை நிறுவவும், தண்ணீரில் கரைப்பதற்கும் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2. பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி, போக்குவரத்து நடைமுறைப்படுத்துதல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல் போன்றவற்றை உறுதி செய்ய பொது இடத்தில் விநாயகர் சிலைகளை நிறுவுவது, பூஜை செய்வது மற்றும் தண்ணீரில் சிலைகளை கரைப்பது சம்பந்தமாக கீழ்காணும் விதிமுறைகள் / கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

3. விநாயகர் சிலைகளை நிறுவும் அமைப்பாளர்கள் கீழ்க்கண்ட தடையில்லா சான்றிதழைப் பெற்று, அந்த சான்றிதழ்களுடன் மதுரை மாநகரில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம், உரிய முறையில் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

சிலை நிறுவப்படும் இடம் பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு / நெடுஞ்சாலை துறையிடம் தடையில்லாச் சான்று பெற்று காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் ஒலிபெருக்கி அனுமதியுடன் (Sound amplifier license / permit) கூடிய தடையில்லா சான்று பெற்று காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிலை நிறுவ தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் இதர அமைப்புகள் தீ பாதுகாப்பு தரத்துடன் இருப்பதை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் பெற்று காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடமிருந்து (TANGEDCO) தற்காலிக மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெறப்படும் ஆதாரம் ஆகியவற்றை தெரிவிக்கும் கடிதம் பெற்று காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

4. மேற்படி ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர்களால் கீழ்காணும் விதிமுறைகளின் அடிப்படையில் தேவையான அனுமதி வழங்கப்படும்.

நிறுவப்படும் சிலைகள் சுத்த களிமண்ணால் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதிக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (Plaster of Paris) தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டும், வேதிப் பொருட்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்ட சிலைகள் தடை செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி சிலைகள் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு இருந்தால் நீரில் கரையக்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கையான சாயங்கள் உபயோகிக்கப்பட்டு இருக்கவேண்டும். அமைப்பாளர்கள் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு தற்காலிகமாக அமைப்புகளை அமைக்க வேண்டும். மேலும் மேற்படி அமைப்புகளுக்கு உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்/ வெளி செல்ல எந்தவித சிரமமுமின்றி சென்று வரும் வகையில் அமைக்கப்படவேண்டும்.

விநாயகர் சிலைகள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக 12.00 மணிக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டு முறையாக அமைதியான முறையில் கரைக்கப்பட வேண்டும். முடிந்தவரையில் ஊர்வலம் ஆனது மசூதிகள் / கிறிஸ்தவ சர்ச்சுகள் ஆகியவற்றை தவிர்த்து செல்ல வேண்டும்.

அமைப்பாளர்கள் சிலை அமைக்கும் இடத்தில் தேவையான முதலுதவி மருந்து மருத்துவ உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் மேலும் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை சிலையை சுற்றி எந்த இடத்திலும் இல்லாதவாறு உறுதி செய்ய வேண்டும்.

நிறுவப்பட உள்ள சிலைகள் கண்டிப்பாக 10 அடி உயரத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.

வவழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் மருத்துவமனைகளுக்கு அருகிலோ கல்வி நிலையங்கள் அருகிலோ அல்லது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களிலிலோ சிலைகளை அமைக்கக்கூடாது.

மைக் அனுமதி காலை 2 மணி நேரம் மற்றும் மாலையில் 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும். பூஜை சமயத்தில் சிறிய அளவிலான பெட்டி (Box) வடிவ ஒலி ஒன்று மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். ஒலிப்பான்களின் சத்தத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது. இசை ஒலிபரப்பப்படும் பட்சத்தில் அதன் சத்தம் (டெசிபல்) அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கண்டிப்பாக இருக்கக் கூடாது கூம்பு வடிவ (Cone) ஒலிப்பான்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வழிபாடுகளை காரணம் காட்டி சட்டவிரோதமாக மின்சாரத்தை எடுத்தல் உள்ளிட்ட எந்த விதமான சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடைபெறா வண்ணம் அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சிலை நிறுவப்படும் இடங்களில் எந்த ஒரு அரசியல் கட்சியினர் உடைய அல்லது மத சார்புடைய அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போடுகள் இருக்கக் கூடாது.

அமைப்பாளர்கள் சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் இரண்டு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். சிலை நிறுவப் பட்டுள்ள இடத்தைச் சுற்றி சிறந்த முறையில் ஒலி அமைப்பு செய்திருக்கவேண்டும். மின் தடைகள் ஏற்படின் ஜெனரேட்டர்கள் உபயோகப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத உணர்வைத் தூண்டும் வகையிலோ மற்ற மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் வகையிலோ கோஷங்கள் எழுப்புவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் (மினி லாரி / டிராக்டர்) உபயோகப்படுத்தப்பட வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மூன்று சக்கர வாகனங்கள் அனுமதிக்கக்கூடாது.

விநாயகர் ஊர்வலத்தின் போது வாகனத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 1988ம் வருடம் மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிகமாகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் கண்டிப்பாக வெடிகளை வெடிக்க கூடாது.

பொது அனுமதி, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய அமைப்பாளர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் அறிவுறுத்தும் எந்த ஒரு நிபந்தனைகளையும் அமைப்பாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தீ பாதுகாப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகளால் ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையில் பந்தல்களில் அமைக்கப்பட்டுள்ள மின்சார சாதனங்களின் பாதுகாப்பும் உறுதி தன்மையை சோதித்து ஒப்புதல் தீயணைப்புத் துறையினரிடம் பெற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர், காவல்துறையினர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் பரிசீலனை செய்து அறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.

பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அச்சிலைகள் நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.

சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சிலைகளில் இருந்த பூக்கள், துணிமணிகள், பிளாஸ்டிக் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை தனியாகவும் மறுசுழற்சி செய்யும் பொருட்களை தனித்தனியாகப் பிரித்து எடுக்கப்பட வேண்டும்.

சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சிலை கரைக்கப்பட்ட இடங்களான ஆற்றோரங்கள், நீர்நிலைகள், கடற்கரையோரம் அங்கிருந்து கழிவு பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மறுப்பிற்கு எதிராக காவல் ஆணையர், மதுரை மாநகர் அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்