திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்வார்கள்.மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் உள்ள ராஜகோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய கோபுர வாசல்களில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க சதி செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 4 கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக கோவிலில் சுமார் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தெரிவித்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியின் உத்தரவின் பேரில் கோவில் மட்டுமின்றி மாவட்டத்தில் அதிக மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..