கோவையில் கால் டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய அதிர்ச்சி சம்பவம்

கோவை : சூலூர் அருகே வாடகைக்கு டேக்ஸி புக் செய்த அந்தமான் தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்த முயற்சி செய்த சம்பவம் ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் ரெட் டாக்ஸியில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில்,  அதிகாலை 2 பேர் மதுரை செல்ல ஓட்டுநர் வசந்தகுமாரின் காரில் சிங்காநல்லூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சூலூர் அருகே சென்ற போது, பின்னால் அமர்ந்திருந்த இருவர் திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்தி காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து, அந்த நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.பின்னர், சாலையில் சென்று கொண்டிருந்த நபர்கள் ஓட்டுநரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க திருப்பூர் போலீசாரை உஷார் படுத்தினார். இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, திருப்பூர் அருகே போலீசார் சோதனையில் இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். இதை தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் திருமுருகன் என்பதும், தப்பி ஓடியவர் கொங்குசாமி என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் அந்தமான், நிக்கோபர் தீவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, தப்பியோடிய கொங்கு சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு கார் பதிவு செய்து வரவழைத்து, ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்த முயன்ற சம்பவம் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..