இ-சேவை மையம் உட்பட அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்வு தள வசதி இல்லா அவல நிலை

மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் பாகுபாடின்றி நடத்த வழிவகை செய்யும் ஊனமுற்றோர் உரிமைச்சட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றியுள்ளது.இச்சட்டத்தில் மிகவும் தெளிவாக மாற்றுத்திறனாளிகளை எந்த இடத்திலும் புறக்கணிக்காத வண்ணம் அனைத்து பொது இடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும், வெஸ்டர்ன் கழிப்பறை வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும், மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனங்களை நிறுத்த வசதியாக தனியாக வாகன நிறுத்தம் ஏற்ப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சரத்துக்கள் அடங்கிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.மாநில அரசு கடந்த 2012ம் ஆண்டே அனைத்து பொதுக்கட்டிடங்களிலும் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் மீது மிகுந்த அக்கறை செலுத்துவதாக விளம்பரம் செய்தாலும் உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

தனியார் கட்டிடங்களில் 100% மேற்கண்ட வசதிகள் இன்றுவரை செய்து தராத சூழ்நிலையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் கூட இன்றுவரை சாய்வுதளம் அமைத்து தராதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.சட்டங்கள் இயற்றியும், அரசாணை வெளியிட்டும் என்ன பலனுமில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 80% அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் எவ்வித வசதிகளும் செய்து தரப்படுவதில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துவங்கி கீழ்மட்ட அரசு அலுவலகங்கள் வரை யாருமே மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து கவலைப்படுவதில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வயதினரும், மாற்றுத்திறனாளிகளும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக சான்றிதல் பெற அன்றாடம் வந்து செல்லும் ஈ சேவை மையங்கள் எதிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தரவில்லை.பலமுறை எங்களது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் புகார் மனு அளித்தும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்தியும் இன்றுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்கிறது.இந்த நிலையில் (13.08.19) காலை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஈ சேவை மையத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு சான்றிதல் பெற வந்திருந்த அக்குழந்தையின் பெற்றோர் பட்ட கஷ்டம் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.

15 வயதுடைய குழந்தையை உடல் எடையின் காரணமாக தூக்கவும் முடியாமல் வீல்சேர் உள்ளிட்ட எந்த வித வசதிகளும் இல்லாத ஈ சேவை மையத்திற்குள் சென்று சான்றிதல் பெறுவதற்குள் அந்த குழந்தையை பெற்ற பெற்றோர் பட்ட கஷ்டம் சொல்லிமாளாதது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் படும் துன்பங்களை போக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும், குறிப்பாக ஈ சேவை மையங்கள் அனைத்திலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் மற்றும் வீல்சேர் வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வேறு வழியின்றி எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் நிறைவேறும்வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலுவலகத்தின் முன்பாக நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

*

புனித ரமலான் வாழ்த்துக்கள்..