எஜமானி உடல் அருகே யாரையும் செல்ல விடாத வளர்ப்பு நாய்..

இறந்த பெண்ணின் உடலை யாரும் தொட விடாமல் விரட்டிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயின் பாசப் போராட்டம், பார்ப்போர் கண்களில் நீரை வரவழைத்தது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ராதா. இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தனசேகரன், வீடு மற்றும் நிறுவனங்களுக்கு வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்துவந்தார்.இந்நிலையில், தொழிலை மேம்படுத்துவதற்காக தனசேகரன் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். ஆனால், தொழிலை அவரால் மேம்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ஒருகட்டத்தில் கடன்காரர்களின் நெருக்கடி அதிகமாகவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு தனசேகரன் தலைமறைவானார். இதையடுத்து ராதா, கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.இந்நிலையில், தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததுடன், ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர். இதனால் மனவேதனை அடைந்த ராதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸார், ராதா வீட்டிற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது ராதா வளர்த்த செல்ல நாய், அவரின் உடல் அருகே அமர்ந்துகொண்டு, உடலின் அருகே யார் சென்றாலும் குரைத்து விரட்டிக் கொண்டிருந்தது.

போலீஸார் எவ்வளவோ முயன்றும், அவர்களால் அந்த நாயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராதாவின் மகள் வந்து தாயின் உடல் அருகே அமர்ந்திருந்த நாயை இழுத்துச் சென்று சங்கிலியால் கட்டிப் போட்ட பிறகு, ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தனது எஜமானியின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவருடைய உடலை யாரும் நெருங்க விடாமல் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்கச் செய்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..