ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் நடைபெறும் சீரமைப்பு பணிகளை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா , அடப்பாறு, வெள்ளையாறுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் கீழ் சீரமைப்பு பணிகளை பொன்னிரை, ஆண்டாங்கரை, திருக்கொள்ளிக் காடு, விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, தட்டாங்கோவில், மாவூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் .பாண்டியன் நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார பாசன ஆறுகள் , வடிகால் ஆறுகள் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ 1562 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி மறு சீரமைப்புப் பணிகளை அறிவித்தார். அதில் முதல் கட்டமாக திருவாரூர் , நாகை மாவட்டங்களில் ரூ 962 கோடி மதிப்பீட்டில் வளவனாறு , பாண்டையவாறு, அரிச்சந்திரா ஆறு , வெள்ளையாறு , அடப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் பணிகள் துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை முப்பது சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.

இந்த பணிகளை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் ஆளும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்களின் நட்பின் காரணத்தால் இங்கே பணியாற்றக்கூடிய பொறியாளர்கள் சொல்வதை கேட்பதில்லை. பணிகளை உரிய காலத்தில் துவங்கவில்லை. பணிகளை விரைந்து மேற்கொள்ளாமல் பாசன ஆறுகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு கிடக்கிறது . பாசன மதகுகள் , கதவணைகள் தடுப்பு சுவர்கள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. நாளைய தினம் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆறுகள் வழியாக நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி செய்யக் கூடிய பாசன பகுதிகளுக்கு செல்லும் பாசனம் தடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை ஒரு போக சம்பா சாகுபடிக்கு கொண்டு செல்லும் ஆறுகள் நிலை குழைந்து கிடப்பதால் இந்த ஆண்டும் ஒரு போக சம்பா சாகுபடியை மேட்டூர் தண்ணீரை கொண்டு பணியை துவங்க முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது .

எனவே இந்த பணிகளை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் ஆமை வேகத்தில் ஆறு ஆண்டுகாலமாக 30 சதவீத பணிகளை கூட மேற்கொள்ளாமல் காலம் கடத்துகிறார்கள். திட்டமிட்டு ஊழல் முறைகேடு செய்வதற்காகவே ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் பணிகளை துவங்காமல் காலம் கடத்துவதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மாவட்ட அமைச்சர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட ஆய்வு செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.குறிப்பாக கோரையாற்றிலிருந்து பிரியும் அரிசந்திரா ஆற்று பாசன மதகு கதவனைகள் சீரமைக்கும் பணியே முடிவடையவில்லை. எனவே தமிழக முதல்வர் விரைந்து அவரது நேரடி பார்வையில் அரசுத்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவுபடுத்தி பணிகளை முடிப்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் காவிரி டெல்டா கேள்விக்குறியாகி விடும்.நிலுவையில் உள்ள ரூ.600 கோடிக்கான கோரையாறு , பாமணி ஆறுகள் சீரமைக்கும் பணிகளை டெண்டர் விடுவதற்கான பணிகளைக் கூட மேற்கொள்ளவில்லை எனவே ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான ஆசிய வளர்ச்சி வங்கியின் முலம் நிறைவேற்றப்படுகின்ற இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அப்போது திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், துணை தலைவர் எம்.கோவிந்தராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் SVK.சேகர், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், இராதாகிருஷ்ணன், சங்கர், செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..