மண்டபம் அருகே விதிகளை மீறும் மணல் குவாரிகள் உரிமம் ரத்து செய்ய ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராமத்தினர் புகார் மனு .

இராமநாதபுரம்மாவட்டம் நொச்சியூரணி, சாத்தக்கோன்வலசை, வேதாளை ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை பாழ்படுத்தும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவடு மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரி அனுமதித்த நாள் முதல் தற்போது வரையிலான நடைபெற்றுள்ள கனிம வள விதிமீறல்களை ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு அமைப்பாளர் பி.குரு சேவ் தலைமையில் சாத்தக்கோன்வலசை ஊராட்சி பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் இன்று மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இராமநாதபுரம்மாவட்டம் நொச்சியூரணி, சாத்தக்கோன்வலசை, வேதாளை ஆகிய .ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழில் சார்ந்துள்ளது. இப்பகுதிகளில் பனை, தென்னை மரங்கள் அதிகமுள்ளன. சாத்தக்கோன்வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தில் அரசு பழத்தோட்டம் உள்ளது. நொச்சியூரணி ஊராட்சியில் மல்லிகை சாகுபடி பிரதானமாக உள்ளது. மணல் பாங்கான பகுதியான இங்கு, அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் குவாரிகளுக்கு ராமநாதபுரம் கனிம வளத்துறை உரிமம் வழங்கி வருகிறது. இந்த உரிமத்தை பயன்படுத்தி அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில் அளவுக்கதிமாக அள்ளப்படுகிறது. இதனால் நிலவும் நிலத்தடி நீர் பாதிப்பை கருத்தில் கொண்டு மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். மணல் குவாரி உரி மத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால், இது நாள் வரை அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, நொச்சியூரணி, வேதாளை ஊராட்சிகளில் சவடு மணல் அள்ள மீண்டும், மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இப்பகுதிகளில் டிப்பர் லாரிகளில் 300 முறை மணல் தினமும் அள்ளப்படுகிறது. விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால் குடிநீர் உவர் நீராக மாறி வருகிறது. மல்லிகை சாகுபாடி பாதிப்பால் எங்கள் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. நொச்சியூரணி, சாத்தக்கோன்வலசை, வேதாளை ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை பாழ்படுத்தும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவடு மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரி அனுமதித்த நாள் முதல் தற்போது வரையிலான நடைபெற்றுள்ள கனிம வள விதிமீறல்களை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தக்கோன் வலசை ஊராட்சி முன்னாள் தலைவர் வீரபத்திரன், கடல் தொழிலாளர் சிஐடியு., சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, .வழக்கறிஞர்கள் சீனி முத்து, மகேந்திரன்,ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி முகவை அழகுடையான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..