பிச்சை எடுக்க வைக்கப்பட்ட 5 வயது ஆண் குழந்தை மீட்பு.பெற்றோரை தேடுகிறது

கரூர் ரயில் நிலையத்தில் பரிதாபமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை குழந்தைகள் நலக் குழு மீட்டதுடன் ஆறு மாதங்களாக அவர்கள் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அந்தக் குழந்தைகள் எங்களுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் எனச் சொன்னதையடுத்து தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் எடுத்த தீவிர நடவடிக்கையில் மூன்று குழந்தைகள் அவர்கள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தருண் என்ற 5 வயதுச் சிறுவனின் விவரம் மட்டும் தெரியவில்லை. `பெற்றோரின் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் அவனைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் அவனை அழைத்துச் செல்லுங்கள்’ என குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்தவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

இது குறித்து குழந்தைகள் நலக் குழுவின் தஞ்சை மாவட்ட தலைவர் திலகவதி பேசுகையில், “மதுரை விளாச்சேரியினைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. 29 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடைசியாக கரூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது அவரிடம் நான்கு குழந்தைகள் இருந்துள்ளன. சைல்டு லைன் அமைப்பினர் அவர்களை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.பரமேஸ்வரி குழந்தைகளை கேட்டு வந்த போது உரிய ஆவணங்களை காட்டிவிட்டு குழந்தைகளை அழைத்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவர் வரவே இல்லை. இதையடுத்து அந்தக் குழந்தைகள் தஞ்சாவூர் எனத் தெரிவித்தையடுத்து எங்களிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் நாங்கள் பேசிய போது எந்தத் தகவலையும் சரியாகச் சொல்லவில்லை. குழந்தைகளை காணாமல் பெற்றோர்கள் தவிக்கும் தவிப்பை உணர்ந்து அடிக்கடி குழந்தைகளிடம் பேசி வந்தேன். அப்போது பிரித்திவிராஜ் நாங்க மதுரை என்றும் படித்த பள்ளி மற்றும் ஆசிரியரின் பெயர்களையும் கூறினான்.அவன் சொன்ன பள்ளியில் விசாரித்தபோது அவை உண்மை என்று தெரிய வந்ததுடன் அவர்களின் தந்தையையும் கண்டுபிடித்து வரவழைத்தோம். அவர் ஆட்டோவில் வந்து இறங்கியதுமே மூன்று பிள்ளைகளும் தாவிக் குதித்து ஓடி கட்டிக் கொண்டன. அவரும் வாரியணைத்துக்கொண்டு அழுது கொண்டே கொஞ்சினார். தருண் மட்டும் ஏக்கமாக தனியாக நின்றான். அப்போது அவர் மூன்று குழந்தைகள் மட்டுமே என்னுடையது. தருண் என் குழந்தை இல்லை எனத் தெரிவித்தார். பிறகு உரிய ஆவணங்களை காட்டிவிட்டு குழந்தைகளை அழைத்துச் சென்றார்.தற்போது அவன் எங்கள் கண்காணிப்பில் நாசரேத் ஹோமில் இருக்கிறான். அவர்கள் அவனை பாதுகாப்பாகப் பராமரித்து வருகிறார்கள்.தருணின் பெற்றோரோ அல்லது அவனைப் பற்றி விவரம் அறிந்தவர்களோ யாராக இருந்தாலும் உடனே எங்களிடம் வந்து அவனை மீட்டுச் செல்லுங்கள். அவன் உங்களுக்காக ஏங்கித் தவிக்கிறான். எப்போது அவன் பெற்றோரிடம் சேர்கிறானோ அந்த நாள்தான் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள்” எனத் தெரிவித்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..