சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; தத்தளித்த 9 பேர் மீட்பு..!

ரஷ்யாவுக்கு டைல்ஸ் ஏற்றிச் சென்ற ஈரான் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 2 இந்தியர்கள் உட்பட 9 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஈரானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பாகாங்’ என்ற சரக்கு கப்பல், ஈரான் அன்சாலி துறைமுகத்தில் இருந்து தள ஓடுகளை (டைல்ஸ்) ஏற்றிக் கொண்டு ரஷ்யாவில் உள்ள மக்காச்சாலா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது.

கப்பலில், 2 இந்தியர்கள், 7 ஈரானியர்கள் என மொத்தம் 9 பேர் இருந்தனர். இந்தக் கப்பல் அசர்பைசான் நாட்டின் லஸ்காரன் துறைமுகம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கப்பலில் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக கடல் நீர் உள்ளே புகத் தொடங்கியதுஇதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கப்பல் ஊழியர்கள், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அப்போது, அபர்பைஜான் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் அந்த வழியாகச் சென்றது. அதைப் பார்த்ததும், சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் உதவி செய்யுமாறு கூச்சலிட்டனர்.

இதையடுத்து சரக்கு கப்பல் அருகே சென்ற ரோந்து படையினர், கப்பலில் இருந்த 9 பேரையும் பத்திரமாக மீட்டதுடன், இதுகுறித்து அபர்பைஜான் துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே 2 ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல்கள் அங்கு விரைந்தனதொடர்ந்து, ரோந்து கப்பல்களின் உதவியுடன் அந்த சரக்கு கப்பல் துறைமுகத்துக்கு இழுத்து வரப்பட்டது. ஆனால், கப்பல் முழுவதும் கடல் நீர் புகுந்ததால், துறைமுகத்தில் அந்தக் கப்பல் மூழ்கியது. இதுகுறித்து, கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..