
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் ‘மூலிகைத் தாய்’ எனும் பட்டம் பெற்ற ஈரோடு மூதாட்டிக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் ‘வைத்ய பூஷன் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (66).
ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ள இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைச் செடி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 2004ம் ஆண்டு இவரது கணவர் இறந்தார். இரண்டு மகன்களுக்கு திருமணமாகி விட்டது. இதையடுத்து, ஈரோடு சாவடிபாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.சாமியாத்தாளுக்கு, காடுகளுக்குச் சென்று மூலிகைச் செடிகளை தேடிக் கண்டுபிடித்து, அதை சித்த மருத்துவர்களுக்கு வழங்குவதுதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. இவரது மூலிகை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வை பாராட்டி, 2012ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், இவருக்கு ‘மூலிகைத் தாய்’ என்ற பட்டத்தை வழங்கினார்.இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம், கட்சி விழா போன்றவைகளில் குடில்கள் அமைத்து, மூலிகைச் செடிகளை வழங்கி வருவதுடன், அதன் மூலம் பல நோய்களுக்கும் தீர்வு கண்டு வருகிறார்.இந்நிலயில், பழனி சித்த மருத்துவ சங்கம் சார்பில் சாமியாத்தாளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, சர்வதேச அமைதி பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் சித்த வைத்திய மருத்துவர்கள், சாமியாத்தாளுக்கு, ‘வைத்ய பூஷன் விருது’ வழங்கி, கவுரவித்தனர்