காவிரி டெல்டாவில் ONGC நிறுவனத்திற்கு தடை விதித்திட தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கONGC, வேதாந்தா நிறுவனங்களோடு மத்திய அரசின் பெட்ரோலியத் துறை ஒப்பந்தம் செய்து வருகிறது. அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியாக அறிவித்துள்ளார்.இந்த நிலையில் ONGC நிறுவனம் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கச்சா எடுக்க கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டு தோண்டப்பட்ட கிணறுகளில் கச்சா இல்லையென்றும் ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு உள்ளதாக கூறி மூடப்பட்டன.

2014 -15ம் ஆண்டு முதல் ONGC ஆய்வு என்கிற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக விளை நிலங்களை அழித்து பேரழிவு ஏற்படுத்துவதாகவும், எனவே ONGC க்கு காவிரி டெல்டாவில் தடை விதிக்க கோரி போராட்டங்கள் தீவிரமடைந்தது.திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. 2015க்கு பிறகு பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ONGC க்கு எந்தவொரு கிணறு அமைக்கும் பணிகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில் தமிழக அரசு ONGC யின் கிணறு அமைப்பதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு 2018 மார்ச் 23ல் உயர் மட்ட ஆய்வுக்குழுவை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது ஹைட்ரோ கார்பன்,பாறை எரிவாயுஉள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் எடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்பந்தம் பெற்றுள்ளதையடுத்து கச்சா இல்லையென்று மூடப்பட்ட பழமையான கிணறுகளை தற்போது 2008ம் ஆண்டில் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பெறப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக கிணறுகள் தோண்ட துவங்கியுள்ளது.குறிப்பாக திருவாரூர் மாவட்டம் பெரிய குடி கிராமத்தில் 2013ல் ஏற்பட்ட பேராபத்தை தொடர்ந்து மூடப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை விதிக்கப்பட்டது. மேலும் விக்கிரபாண்டியம், இருள்நீக்கி உட்பட சுற்று பகுதி கிராமங்களில் கிணறுகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரியகுடி, காரியமங்கலம் பகுதி விவசாயிகளிடம் கஜாபுயல் நேரத்தில் அரிசி, நிவாரண உதவிகளை வழங்கியும், பாசன வடிகால்களை தூர்வாரி கொடுத்தும், புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக ஆசை வார்த்தை கூறியும் சட்டவிரோதமாக மீண்டும் பெரிய குடியில் கிணறு அமைத்து வருவதையும், சோழங்கநல்லுர் கிராமத்தில் அனுமதியின்றி கிணறு அமைக்கும் பணிக்கும் தடை விதிக்க வலியுறுத்தி கோட்டூர் காவல் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மன்னார்குடி RDOஅவர்களின் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆதாரத்துடன் மேற்கண்ட கோரிக்கைகளை எடுத்துக் கூறினோம். அதனை தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதி செய்த அடிப்படையில் இரு கிணறுகளையும் தோண்ட தடை விதிக்கப்பட்டது.சோழங்கநல்லூர் கிணறு அமைப்பதற்கு ONGC யின் அனுமதி கேட்பு விண்ணப்பத்தை தமிழக அரசின் ஆய்வு குழு விசாரணையை சுட்டி காட்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

122 நாட்களில் அனுமதி தராததால் நாங்களே அனுமதியின்றி துவங்கியுள்ளதாகவும் , துவங்க சட்டபடி உரிமை உள்ளதாக ONGC கூறியதால் மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு இறுதி முடிவெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.எனவே காவிரி டெல்டாவில் 2015 முதல் ONGC க்கு புதிய கிணறுகள் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைதி வழங்குவதை நிறுத்தியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கச்சா என்கிற பெயரில் ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுக்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை ஆய்வு செய்து காவிரி டெல்டாவில் ONGC க்கு தடை விதித்திட தமிழக அரசு முன் வரவேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் தமிழக அரசின் வனம் மற்றும் சுற்று சூழல் துறை முதன்மை செயலாளர் திரு சம்பு கல்லோலிக்கர் அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் முன் வரும் 25 ம் தேதி உண்ணாவிரதமும், 26ம் தேதி முற்றுகைப் போராட்டமும் நடத்த உள்ளோம்.அப்போராட்டத்தில் பங்கேற்க நாளை 22 ம் தேதி காலை 10 மணிக்கு மன்னார்குடி பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையித்திற்கு சென்று 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளோம்.

உண்ணாவிரதப் போராட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி துவக்கி வைத்து பங்கேற்கிறார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.அணை பாதுகாப்பு மசோதாவால் முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமை பறிபோகும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள கர்நாடக அனைகளின் நிர்வாக உரிமை பறிக்கப்பட்டு திரும்ப கர்நாடகாவிடமே ஒப்படைக்கப்படும். இம் மசோதா திட்டமிட்டு தமிழக நீர் பாசன உரிமைகளை அபகரிக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மசோதாவை மத்திய அரசே திரும்ப பெறவைத்திட முழு சக்தியையும் ஒன்றுப் பட்டு மேற்க்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வலியுறுத்துகிறோம் என்றார்..திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மன்னார்குடி நகர நிர்வாகிகள் தலைவர் தங்கமணி, செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் முருகேசன்,செய்தி தொடர்பாளர் மணிமாறன்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..