“தமிழ் நம் பண்பாட்டின் அடையாளம்”, பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் துபாய் கலையாசிரியர் பேச்சு

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறையின் (அரசுதவி பெறாப் பாடப்பிரிவு) தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் (அரசுதவிபெறாப் பாட வகுப்பு) தலைவர்  சாதிக் அலி அனைவரையும் வரவேற்றார்.கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் எஸ்.ஹெச். முஹம்மது அமீன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர்  அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசேன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச. மகாதேவன் நோக்கவுரையாற்றினார்.

துபாய் டிவொய்ட் பன்னாட்டுப் பள்ளியின் ஓவியர் மற்றும் கலை ஆசிரியர்  ராஜகிருஷ்ணன்  நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “கலை நாடும் மனம்” எனும் பொருளில் சிறப்புரையாற்றும்போது …“வழக்கமான சிந்தனைப் போக்கிலிருந்து நாம் நகர்கிறபோது தான் நம்மால் படைப்பாளியாக மாற முடியும். எனக்குப் பிடித்தமானவற்றை நான் செய்யத் தொடங்கினால் படைப்பு மனம் வெளிச்சமடையும்.பல நேரங்களில் இயற்கையின் ஓர் அங்கம் நாம் என்பதை மறந்து விடுகிறோம். எதைச் செய்தாலும் முழுமையாக இரசித்து முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதுவும் கலைதான். அந்தந்தக் காலத்தின் புதுமையைக் கலைஞர்கள் உள்வாங்கிப் படைப்பாக மாற்றுகிறார்கள்.

டாவின்சி உலக புகழ்பெற்ற ஓவியர் மோனலிசா ஓவியம், அந்தக் காலகட்டத்தின் இரண்டரை ஆண்டுகள் வரைந்த படைப்பு. இன்றுள்ள தாமிரம் சார்ந்த ஐம்பொன் சிலைகள் 1000 ஆண்டுக்கால சோழர் காலத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.கேள்விகள் சார்ந்த புதுமைச் சிந்தனைகளை மையமிட்ட பன்னாட்டுக் கல்விமுறையில் கலை இன்று முதலிடம் பிடித்துள்ளது. தினமும் புதுப்புது விஷயங்களை அறிவதும் அதைப் படைப்பில் கொண்டு வருவதும் கலைதான்.

வாழ்வின் பல ஆங்கிலச் சொற்கள் கலந்ததாக நம் உரையாடல் மாறிவிட்டது. தமிழ்ச் சமூகத்திற்கு இது நல்லதல்ல. சினிமாவின் மொழிநடை நம் வாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது. நம் தாய்மொழியை நாம்தான் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.ஆங்கில மொழி அறிதல் திறன்தானே தவிர அது அறிவல்ல. நம் தமிழகத்தில் அருங்காட்சியத்தைவிடப் பழமையான பதிவுகள் உடைய இடம் அதிகம். நம் ஆதிச்சநல்லூர் குறித்து உலகம் பேசுகிறது. ஆனால் நாம் அது குறித்துப் பேசுகிறோமா? மாணவப் பருவத்தில் நிறைய படைப்பு குறித்து உரையாடலாம். புதுமையாகத் தமிழை உள்வாங்குங்கள். எல்லாக் காலகட்டத்திலும் புதுமையைச் செய்பவர்களே மிளிர்கிறார்கள்” என்று அவர் பேசினார்.நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்த்துறை (அரசுதவி பெறாப் பாட வகுப்பு) உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. அனுசுயா நன்றி கூறினார். இறுதியில் கலை குறித்து தமிழ் மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு ராஜகிருஷ்ணன் பதிலளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை செய்திருந்தது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..