முழு நேர சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்-TARATDAC கோரிக்கை..

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் சமூகத்தில் நலிவடைந்த மக்களாகிய மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை, திருநங்கைகள், எய்ட்ஸ் நோயாளிகள் என பலருக்கும் மாதாந்திர உதவித்தொகை சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை மட்டுமின்றி விபத்து நிவாரணம், உழவர் பாதுகாப்பு திட்டம் என பல துறைகளும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையை கவனிக்கும் வட்டாட்சியர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பதால் பல பணிகள் தேங்கியுள்ளன.

பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும் வட்டாட்சியரை சந்தித்து முறையிடலாம் என பார்த்தால் அலுவலகத்தில் வட்டாட்சியர் இருப்பதில்லை. அவரது பணி பெரும்பாலும் சார் ஆட்சியர் அலுவலகத்திலேயே கழிந்துவிடுவதால் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இருக்க முடிவதில்லை.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த மனுக்கள் கையாளப்படும் அலுவலகத்தில் இருவர் பணியாற்றி வந்த சூழ்நிலையில் தற்போது ஒருவர் பதவி உயர்வின் காரணமாக பணி மாறுதலாகி சென்றுவிட்ட நிலையில் ஒருவர் மட்டுமே பணி செய்யும் சூழ்நிலை உள்ளது. அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்வது என்பது இயலாத காரியம்.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பழனி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் பணிபுரிய போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், சமூக பாதுகாப்பு திட்டத்தை மட்டும் கவனிக்கும் வட்டாட்சியரை நியமித்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P.தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..