ஜூலை-10 முதல் சென்னையில் துவங்க இருந்த மாற்றுத்திறனாளிகள் தொடர் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு!!

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை-10 ஆம் தேதி முதல் சென்னையில் மாற்றுத்திறனாளிகளைத் திரட்டி தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை-4 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மாண்புமிகு சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் மருத்துவர் வி.சரோஜா அவர்கள் கூட்டு இயக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார் அவர்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். சுமார் இரண்டு மணி நேரம் இப்பேச்சுவாரத்தை நீடித்தது.மாற்றுத்திறனாளிகளின் சட்ட ரீதியான பல்வேறு உரிமை சார்ந்த பிரச்சனைகளில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையும், சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகள் செயல்படுவதையும் ஆதாரபூர்வமாக சங்க நிர்வாகிகள் எடுத்துக் கூறியதை ஏற்பதாக அமைச்சர் அறிவித்தார்.மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு உறுதி பூண்டிருப்பதாக பேச்சுவார்த்தையின்போது சமூகநலத்துறை அமைச்சர் தெவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சட்ட விரோத, மாற்றுத்திறனாளிகள் விரோத நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகவும், இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் இன்று(ஜூலை-8) சென்னையில் ஆலோசனை நடத்தினர்.அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, ஜூலை-10 முதல் சென்னையில் துவங்க இருந்த தொடர் முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..