Home செய்திகள்உலக செய்திகள் ஆத்தூர் தாலுகாவில் களை கட்டும் மாம்பழ சீசன்… வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்..

ஆத்தூர் தாலுகாவில் களை கட்டும் மாம்பழ சீசன்… வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம்  பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவாரம் உள் கோம்பை பகுதிகள், சித்தையன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன.

தற்போது, கோடைக்கால மாங்காய் சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வழக்கமாக கோடை மாம்பழ சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டிற்கான கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கியது.  அப்பகுதியை சேர்ந்த 80 சதவீத மா விவசாயிகள், தங்களது மாந்தோப்புகளை வியாபாரிகளிடம் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதியில் மாமரங்கள் பூ பூக்கும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சீசன் களைகட்டும். அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காசா லட்டு, கல்லாமை, செந்தூரம், காளபாடி, கிரேப், மல்கோவா, இமாம்பசந்த் ரக மாம்பழங்கள் அதிகமாக விளைகின்றன.

கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை, பருவ மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் மாமரங்களில் மகசூல் குறைந்தது. ஆனால் இந்த மா சீசனில் நாட்டு ரக உயர்ரக மாம்பழங்கள் போதிய விளைச்சல் இன்றி காய்க்கவில்லை. காசா லட்டு, கல்லாமை, நாடு, செந்தூரம் ஆகிய ரகங்களை சேர்ந்த மாம்பழங்கள் மட்டுமே தற்போது வரத்து உள்ளது.

மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக, அதே பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரிகள் ஆங்காங்கே தற்காலிகமாக கூரையால் வேயப்பட்ட குடோன்களை அமைத்துள்ளனர்.

மேலும் தாங்கள் கொள்முதல் செய்யும் மாம்பழங்களை புதுச்சேரி, கேரளா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும், கடலூர், கிரு‌‌ஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் 70 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான மாங்காய்கள் சிறுத்து போய் உள்ளன. குடோன்களின் குவிந்து கிடக்கும் மாங்காய்களை தரம் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் போதிய விலை கிடைக்காமல் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போதிய வருமானம் கிடைக்காமல் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு மாம்பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!