Home செய்திகள் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..

by ஆசிரியர்

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  என  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு செய்துள்ளது.

இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிநீர் பிரச்சினைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?” “நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியும், முதலமைச்சர் திரு பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அடாவடியான பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர- ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வரவில்லை. தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொது மக்களையும் கொச்சைப் படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதலமைச்சரும் பேட்டியளித்து வருகிறார்கள். “குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி ஆணவத்துடன் பேட்டி கொடுக்கிறார்.

“எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்” என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்குமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறார். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாமல் தோல்வியடைந்து நிற்பதோடு மட்டுமின்றி- துறை அமைச்சரும், முதலமைச்சரும் அளிக்கும் பேட்டிகள் “குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்து விட்ட கதையாக” இருக்கிறது.

“உணவகங்கள் மூடப்படுவது”, “பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது”, “ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது” “பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது” என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாகி தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகி- குடிநீர் இல்லாப் பிரச்சினை எதிர்காலத்தின் மீதே மக்களுக்கு ஒரு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து- குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. கடமை தவறிய அதிமுக அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது. ஆகவே, அதிமுக அரசின் அலட்சியத்தையும், முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாகபடு தோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியும் வருகின்ற 22.6.2019 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கழக மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்:கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!