மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கழிப்பறை பூட்டியே கிடக்கும் அவலநிலை…

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் தங்களின் பல்வேறு வாழ்வாதார தேவைகளுக்காக தினசரி திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தினசரி வந்து செல்லும் இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி செய்து தரப்படாத காரணத்தால் மிகப்பெரிய இன்னல்களை மாற்றுத்திறனாளிகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இருக்கும் ஒரே கழிப்பறையையும் தண்ணீர் இல்லை என்கிற காரணத்தை காட்டி பூட்டி வைத்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது.

அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வெஸ்டர்ன் கழிப்பறை இல்லாமல் சாதாரண கழிப்பறை மட்டுமே உள்ளதால் தண்ணீர் இருக்கும் காலத்தில் கூட தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளால் சாதாரண கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.

தமிழக அரசு அனைத்து பொது இடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படவேண்டும் குறிப்பாக வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் என அரசானை வெளியிட்டு ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வலியுறுத்தியும் இன்றுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வெஸ்டர்ன் கழிப்பறை அமைப்பது பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை நேரில் வலியுறுத்தியும் பலனில்லை. பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழிப்பதிலேயே அரசு நிர்வாகம் குறியாக உள்ளது. எனவே வேறு வழியின்றி இம்மாத இறுதிக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி செய்து தரப்படாவிட்டால் மாபெரும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடத்த வேண்டியிருக்கும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்திலுள்ள பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறை முதல் ஏனைய வசதிகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுதலின்றி விளம்பரப்பலகையோடு பெயரளவில் மட்டுமே காட்சியளிக்கிறது.

அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக செய்துள்ள அனைத்து வசதிகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டுமென்பதும்,அவை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..