செங்கோட்டை அருகே விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்…

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் 50 தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானை, கரடி, புலி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

தற்போது மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், குடிநீர் மற்றும் உணவைத் தேடி, வனவிலங்குகள் மலைடியவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் (மே.30) இரவில் செங்கோட்டை அருகே மோட்டை நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள உருட்டுதேரி வகாப் தோட்டம், செட்டியார் காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் குடிநீர் மற்றும் உணவைத்தேடி யானைகள் கூட்டமாக புகுந்தன.அங்கிருந்த தென்னை மரங்கள்,பாக்கு மரங்களை வேருடன் யானைகள் பிடுங்கி எறிந்து நாசம் செய்தது.

மாமரங்களின் கிளைகளையும் முறித்து சேதப்படுத்தின. மேலும் அங்கிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தின. இதில் சுமார் 50 தென்னை மரங்கள்,20 பாக்கு மரங்கள்,5 மாமரங்கள் கடும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சேதம் அடைந்த அனைத்து மரங்களுக்கும் அரசு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image