வாரணாசி தொகுதியில் பாஜக… இராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் வெற்றி.. மத நல்லிணக்க மிக்க இந்தியர்களுக்கு இது உதாரணம்.. எம்பி., நவாஸ் கனி பெருமிதம்..

இராமநாதபுரம் மாவட்ட திமுக., சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று (30/05/2019) ABC மஹாலில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் எம்பி., கா.நவாஸ் கனி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: இந்தியர்கள் என்றென்றும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வருகின்றனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என பேதம் பாராமல் உரிமையுடன் உறவு பாராட்டி அழைக்கும் பழக்க வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. இதற்கு நல் உதாரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்தி விட்டன. இந்துக்கள் இந்து வேட்பாளருக்கும், முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கு தான் வாக்களிப்பர் என்ற பிரசாரத்தை வேட்பாளர்கள் பொய்யாக்கி விட்டனர். காசி முதல் ராமேஸ்வரம் வரை ஒரே முகம் கொண்ட மதசார்பற்ற இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காசியை உள்ளடக்கிய வாரணசி தொகுதியில் பாஜக ., வேட்பாளரான பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தை தன்னுள் கொண்டுள்ள ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட நானும் (நவாஸ்கனி) வெற்றி பெற்றதால் மத சார்பற்ற இந்தியா என்பதை இந்திய மக்கள் நிரூபித்துள்ளனர். நாம் இன்று போல் என்றும் மத நல்லிணக்கத்துடன் இருந்நூ வருகிறோம் என்பதற்கு இப்தார் நோன்பு திறப்பு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வ.சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன், திமுக முன்னாள் மாவட்ட செயலர் சுப.த.திவாகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜஹான், மாவட்ட தலைவர் வருசை முகமது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அகமது தம்பி, வர்த்தக அணி மாநில துணை செயலர் கிருபானந்தம், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் ஏ.சி.ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய செயலர் கனகராஜன், ராமேஸ்வரம் திமுக நகர் பொறுப்பாளர் நாசர் கான், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..