Home செய்திகள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி..

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி..

by ஆசிரியர்
தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம்  தேதி நடந்த முற்றுகை போராட்டத்தில்   போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் கந்தையா, சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஸ்னோலின், ஜான்சி ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உட்பட பல்வேறு கட்சியினரும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர், அமைதி ஊர்வலம் நடத்த அரசு அனுமதிக்காத நிலையில் 500 பேர் மட்டும் பங்கு பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் நினைவஞ்சலி கூட்டத்திற்க்கு நீதி மன்றம் அனுமதி அளித்திருந்தது
இதனை முன்னிட்டு இந்த போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏபிசி சண்முகம்,  காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, தெர்மல் ராஜா, மதிமுக துணைப் பொதுச் செயலளர் மல்லை சத்யா, மீனவர் சங்க பிரதிநிதி கயாஸ், பேராசிரியை பாத்திமாபாபு, வழக்கறிஞர் அதிசயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் மூலம் அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்து போராட்டம் வீரியமெடுக்க முக்கிய திருப்புமுனையாக அமைந்த ஸ்டெர்லைட் அருகில் உள்ள கிராமமான குமரெட்டியாபுரத்தில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் உயிரிழந்த 13 பேர் களின் திருவுருவப் படத்திற்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, அந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தமிழ் கொற்றம் கட்சி தலைவர் வியனரசு, தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், தி.மு.க தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் வைத்து நினைவஞ்சலி கூட்டம்  நடைபெற்றது, கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநில செயற் குழு உறுப்பினர் கனகராஜ்,  பூவுலக நன்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜ், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள்  ஷாஜிசெல்லம், சுப்பு வாமனன்,  முத்து ராமலிங்கம், சீனிவாச ராவ்,மாநகர செயலாளர் பாரதி ராஜா,   ஒன்றியசெயலாளர் சங்கரன்,  , புறநகர் செயலாளர்  ராஜா , DYFI மாவட்ட செயலாளர் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் அதன் தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில்  உயிரிழந்த போராளிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில்  ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த 13 பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாலவினாயகர் கோவில் தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது , இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக கழக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் கவிஞர் மணிகண்டன், மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
இதுபோல் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தவர்களின் கல்லறைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவி ஸ்னோலின் கல்றையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க போராளி தமிழ்மாந்தன், சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி ஜார்ஜ்ரோடு தருவை மைதானம் எதிரில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தின் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி ஏராளமானோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் சந்தனசேகர்  தலைமையில் நடைபெற்றது. அதில் ஏஐடியுசி மாநில செயலாளர் மணி ஆச்சாரி,இளைஞர் பெருமன்ற தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பாலமுருகன், இந்திய வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் சுப.இராமசந்திரன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன், அக்ரி பரமசிவன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் கைலாசமூர்த்தி, தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ், ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்
நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் பெயரால் இளைஞர் பெருமன்றத்தினர் உறுதிமொழி ஏற்றனர். மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திரளாக பங்கு பெற்றனர்.
துப்பாக்கிச்சூட்டில்  பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைப்பெற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் 3 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!