Home செய்திகள் தனது இருக்கையில் அமரவைத்து மாணவியை ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்..!

தனது இருக்கையில் அமரவைத்து மாணவியை ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்..!

by ஆசிரியர்

கலெக்டர் ஆக விரும்புவதாக தேர்வில் பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்தினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆங்கில பாடத்திற்கான தேர்வில், ‘நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்..? உங்கள் முன்மாதிரி மனிதர் யார்..?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு, ‘எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான்’ என்று, 6ம் வகுப்பு மாணவி மனோபிரியா என்பவர் பதில் எழுதியுள்ளார். இந்த பதில், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை, பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி என்பவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த கலெக்டர், அந்த மாணவியை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரச்சொல்லியுள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளியின் மாணவ – மாணவிகள் சிலரை அழைத்துச் சென்று மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

கலெக்டராக விரும்பிய மாணவி மனோபிரியாவை அழைத்துப் பாராட்டிய கலெக்டர் அன்பழகன், மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார். பின்னர் அவர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, “நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

பின்னர், மாணவ – மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு, அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து, வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!